மஹிந்த ராஜபக்சவின் தேவைக்காக எம்மால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாது

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

நாட்டையும் கட்சியையும் நேசிக்கும் ஒருவரே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ள முடியாத அபிவிருத்தியை இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

முன்னைய அரசாங்கத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் ஒரு கோடி, இரண்டு கோடி என்றே அபிவிருத்தி செய்ய முடிந்தது.

ஆனால் இன்று எமது அரசின் கம்பெரலிய திட்டத்தின் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குறைந்தது 50 கோடிக்கு மேல் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கிறார்.

வைத்தியசாலைக்கு கட்டிடங்கள் வழங்கப்படுகின்றன. “அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டம் மூலம் பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் வழங்கப்படுகின்றன. பிரதேச செயலகங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு எல்லா அமைச்சு மூலமும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பெரும்பாலான கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு கம்பெரலிய திட்டம் தொடருமாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து கிராமிய வீதிகளும் புனரமைக்கப்பட்டு விடும்.

இந்த அபிவிருத்தி பணிகள் ஊடகங்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

அவர்கள் இப்போது தேடுவது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை. அவர்களுக்கு நான் கூற விரும்புவது மஹிந்த ராஜபக்சவின் தேவைக்கோ கட்சியை உடைக்க நினைப்பவர்களின் தேவைக்கோ எம்மால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாது.

நாட்டையும் கட்சியையும் நேசித்து பாதுகாக்க கூடிய ஒருவர் பொருத்தமான நேரம் வரும்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வர்.

ஆகவே இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடரவேண்டுமாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.