முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கியமைக்கு கூட்டமைப்பு இன்று வருந்துகின்றது! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புகளின் பின்னணி கிழக்கு மாகாணத்திலேயே வலைபின்னப்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த குண்டு வெடிப்பில் தமிழ் கிறிஸ்தவர்களே பெருவாரியாக இறந்துள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி நான்காவது மத்திய குழுக் கூட்டம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எமது கட்சி ஆரம்பித்து நாளை மறுநாளுடன் 9 மாதங்கள் முடிவடைகின்றன. எமது முன்னேற்றம் ஆமை வேகத்தில் போவதற்கு பல காரணங்கள் உண்டு.

முக்கியமாக எமக்கென பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்று இல்லாமை எம்மைப் பல விதங்களில் பாதித்துள்ளது. விரைவில் அந்தக் குறைபாடு நீங்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இதுவரை காலமும் வட மாகாணத்தில் வைத்த எமது மத்திய குழுக்கூட்டத்தை இம்முறை இங்கு மட்டக்களப்பில் வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். முதலில் இக்கூட்டத்தை இம்மாதம் முல்லைத்தீவு அல்லது மன்னாரில் தான் வைக்க இருந்தோம்.

இங்கு எமது கட்சியின் பணிமனை திறந்து வைக்கும் வைபவம் இருந்ததால் மத்திய குழுக்கூட்டத்தையும் இன்றே இங்கு வைக்க முடிவெடுத்து எமது நான்காவது மத்திய குழுக்கூட்டம் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணப் பிரச்சினைகள் வடக்கில் இருந்து வேறுபட்டவை என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே, அடுத்த கிழக்கு மாகாணசபையில் மேலதிகத் தமிழ் பிரதிநிதித்துவம் வந்துற நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

யார் யார் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தப்போகின்றார்கள் என்பதை மக்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளார்கள்.

தாங்கள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வேற்றுக் கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லிமுக்குக் கொடுத்ததற்காக தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருந்துகின்றது.

கிழக்கு மாகாண சபையில் 11 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, 7 அங்கத்தவர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம் முதலமைச்சர் பதவியைத் தாரைவார்த்தது.

1 1/2 வருடங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் அப்பதவியை ஒரு வருடத்திற்கு ஏற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டும். அவ்வாறு நடக்கவில்லை. இதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல இனங்கள் வாழும் பிரதேசங்களில் அதிகாரம் செலுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம்; தலைமைகளுள் ஒரு முக்கிய வேறுபாட்டை நான் கண்டுள்ளேன். முஸ்லிம் தலைவர்கள் தம்மின மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்ய அல்லது வழங்க பின் நிற்கமாட்டார்கள்.

ஆனால், எமது தமிழ் தலைமைகளோ “சேச்சே! நான் எனது இனத்தாருக்கு நன்மைகள் வழங்கினால் ஊரார் என்னைக் குறைசொல்வார்கள்” என்று கூறி தமது இனத்தவருக்கு எதையுமே வழங்க முன்வரமாட்டார்கள்.

உண்மையில் ஒரு சிங்கள உயர் அதிகாரியிடம் இருந்து பெறக்கூடிய நன்மைகளைக்கூட எமது தமிழ்த்தலைமைகள் வழங்கப் பின் நிற்பார்கள். இதுதான் யதார்த்தம்.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர்கள் இருந்த காலத்தில் பெரும்பான்மையான திணைக்களத் தலைவர்கள் முஸ்லிம்களாகவே நியமிக்கப்பட்டார்கள்.

இன்றும் பல திணைக்களங்களில் தலைமைத்துவம் முஸ்லிம் அன்பர்களிடமே இருந்து வருகின்றது. சகோதர இனம் என்று அதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம்.

ஆனால், முஸ்லிம் தலைமைத்துவம் முஸ்லிம்களுக்குப் பக்கச்சார்பாக நடந்து கொள்வதால் தமிழ் மக்கள் பலவித இடர்களை அனுபவித்து வருகின்றார்கள். பக்கச் சார்பின்மையை அவ்வாறான தலைமைத்துவத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது இருக்கின்றது.

முஸ்லிமுக்கு முஸ்லிம் பக்கச் சார்பாக நடப்பது சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் நியாயப்படுத்தப்படுகின்றது. நண்பர் அஷ்ரப் அவர்கள் துறைமுக அலுவல்கள் அமைச்சராக இருந்த போது திடீரென்று பல முஸ்லிம்களை துறைமுக சேவை பணியாளர்களாகச் சேர்த்தார்.

500, 600 முஸ்லிம்களை ஒரே நேரத்தில் சேர்த்ததும் பத்திரிகைகள் பாரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர் எதிர்ப்புகளை அசட்டை செய்து கொண்டு தான் நினைத்தது போல் வேலை வாய்ப்பை முஸ்லிம்களுக்கு வழங்கி வந்தார்.

நான் ஒரு முறை அவருக்கு எதிரான பத்திரிகை செய்தியொன்றைச் சுட்டிக்காட்டி “என்ன! துணிந்து துறைமுகத்தில் உங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கின்றீர்களாமே!” என்றேன்.

அவர் கூறினார் “அது ஒன்றுமில்லை. வருடா வருடம் துறைமுகப் பணியாளர்களின் உள்ளமர்த்தலின் போது இத்தனை விகிதம் முஸ்லிம் சிறுபான்பான்மையினருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை உண்டு.

ஆனால், கடந்த பல வருடங்களாக அது அமுல்படுத்தப்படவில்லை. சிங்கள மக்களுக்கே வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

நான் குறித்த கோட்டா அடிப்படையில் குறித்த சுற்றறிக்கைப்படி ஒவ்வொரு வருடத்திற்கும் எத்தனை முஸ்லிம்களை உள்ளேற்றிருக்க வேண்டும் என்று கணக்கிட்டு அவ்வாறு உள்ளேற்காத அந்த முஸ்லிம் பணியாளர்கள் தொகையினருக்கே இவ்வருடம் மொத்தமாகக் கொடுத்துள்ளேன்” என்றார்.

இவ்வாறு சிந்தித்துத் தமது மக்கள் சார்பில் செயலாற்ற முஸ்லிம் தலைவர்கள் முன்வருகின்றார்கள். ஆனால், தமிழ்த் தலைமைகளோ அவர் என்ன சொல்வார், இவர் என்ன சொல்வார் என்ற சிந்தனையில் தம்மவரைப் புறக்கணித்து வருகின்றார்கள்.

நஸீர் அஹமட் எனது நண்பர். கெட்டிக்காரர். வசதி படைத்தவர். அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதை நான் குறை கூறவில்லை. ஆனால், எமது தமிழ் மக்கள் சம்பந்தமாக என்னென்ன அவர் செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி முடிவெடுத்திருக்க வேண்டும்.

அல்லது 1 1/2 வருடங்களின் பின்னர் ஒரு தமிழர் முதலமைச்சராக வருவதை உறுதி செய்திருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் உறுதி செய்யப்படாததாலேயே கிழக்கில் இதுவரை காலமும் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்று எம்மையும் தாண்டி பெரும்பான்மையினராக உருவெடுக்க நாமும் ஒரு காரணமாக இருந்துள்ளோம்.

எம்முள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டிய எம்மவர்கள் சிறு சிறு காரணங்களுக்காக தாம்பத்ய வாழ்க்கையைக் விட்டு அகன்று வாழ்கின்றார்கள்.

எமது ஜனப்பெருக்கம் பல்வேறு காரணங்களினால் தடைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிழக்கில் உள்ள தமிழ்ச் சமூகம் மிகவும் வலிமையற்ற சமூகமாக இருப்பதாலேயே எமது மக்கள் 300 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை மற்றும் தெருக்களின் பெயர்களை முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களாகத், தெருக்களாக உருமாற விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

அக்கிராமங்களின் பெயர்களை முஸ்லிம் நண்பர் ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கு அவை தெரியாமல் இருக்காது. ஒரு இந்துக் கோயிலை இடித்து அங்கு இஸ்லாமிய பல்கலைக்கழகக் கட்டிடம் கட்டியதாக அவர் எங்கோ கூறியது ஞாபகம்.

ஆனால் பெயர்கள் வேண்டுமென்றால் அவற்றைப் பெற்றுத்தரலாம். ஏனென்றால் “அழிக்கப்படும் தமிழ்க் கிராமங்கள்” என்று தொடர்சியாக தமிழ் பத்திரிக்கையொன்றில் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.

மேலதிக விபரங்களையும் பெற்றுக் கொடுக்கலாம். எத்தனை கிராமங்கள் என்பது முக்கியமல்ல தமிழ்க் கிராமங்கள் தெருக்கள் அவ்வாறு பெயர் மாற்றப்பட்டனவா என்பது முக்கியம்.

வணக்கத்திற்குரிய அத்துரெலிய தேரர் அவர்கள் என்னோடு விமானத்தில் பயணிக்கும் போது தமது ஆய்வின்படி சுமார் ஒன்பது ஆயிரம் தமிழ் இந்து, கிறிஸ்தவப் பெண்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.

அண்மையில் நடந்த ஏப்ரல் 21ம் திகதி நிகழ்வுகளின் பின்னணி கிழக்கு மாகாணத்திலேயே வலைபின்னப்பட்டுள்ளன. தமிழ் கிறிஸ்தவர்களே குறித்த குண்டு வெடிப்பில் பெருவாரியாக இறந்துள்ளார்கள்.

இவை யாவும் தமிழ் மக்களின் வலுவற்ற சமூக நிலையை எடுத்துக் காட்டுகின்றது. இரு பக்கமும் அடிபடும் மத்தளங்கள் போல் ஆகிவிட்டார்கள் எம்மவர்கள். அவர்களின் சமூக வாழ்க்கை நிலையை மாற்ற நாங்கள் ஒன்று சேர்ந்து ஆவன செய்ய வேண்டும்.

மேலும், தமிழ் மக்கள் அரசியல் பலம் பெற ஆவன செய்ய வேண்டும். இதற்குத் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் செயற்பாடுகளே முக்கியம்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட கொள்கை அடிப்படையில் பயணிக்கக் கூடிய சகல தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து செயற்பட எமது கட்சி ஆவன செய்ய வேண்டும்.

அதற்கு எமது கட்சி ஆயத்தங்கள் செய்து, உறுப்பினர்களைச் சேர்த்து திட்டமிட்ட வகையில் எமது மக்களின் மீள் எழுச்சியை உறுதிப்படுத்த வேண்டும். எம்மக்கள் செயல் வீரர்கள் சிலரை அடையாளம் கண்டார்களானால் இது முடியும்.

தொய்தல் மனப்பான்மையில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும். தடைகளைத் தகர்த்தெறிய எம்மால் முடியும் என்று கனவு காண்போமாக! தேர்தல்களில் வெற்றி பெறுவதை மட்டும் இலக்காக கொண்டு எமது கட்சியை நாம் நடத்தமுடியாது.

தேர்தல் அரசியலுக்கு அப்பால் பல வேலைத்திட்டங்களை அரசியல் கட்சி என்ற வகையில் நாம் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அது குறித்தும் நாம் ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி தலைமையில் ஒரு மாற்று அணி ஒன்றை ஏற்படுத்தும் வகையில் பரந்த கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து ஊடகங்களில் நிறையவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி கட்சிகளின் தலைவர்களும், பல புத்திஜீவிகளும் என்னுடன் கதைத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக எந்த முடிவுகளையும் நாம் எடுத்து விட முடியாது. நன்கு ஆராய்ந்து நிதானமான முறையில் நாம் செயற்படவேண்டி இருக்கிறது.

ஆனால், இது விடயத்தில் உங்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். எமது வேலைத்திட்டங்களை நாம் விரிவுபடுத்த திட்டமிட்டுவரும் நிலையில் நிதி ஒரு முக்கிய விடயமாக இருக்கிறது.

உள்நாட்டில் எவ்வாறு நிதி சேகரிப்பை மேற்கொள்ளலாம் என்று ஒவ்வொரு மாவட்டமும் ஆராய்ந்து காலக் கிரமத்தில் தம்மைத் தாமே இயக்கும் வல்லமையை ஒவ்வொரு மாவட்டமும் பெற வேண்டும்.

எமது நடவடிக்கைகளில் நாம் வெற்றி காண இறைவன் ஆசீர்வதிப்பானாக! மேலும், வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடையே கூடிய கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கிழக்கின் நிலையை முற்றாக வடக்கு மக்கள் உணர்ந்து செயற்படும் நிலை விரைவில் மலர வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.