இலங்கை பௌத்த நாடு என்பதை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்கின்றோம்! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை

Report Print Murali Murali in அரசியல்

சர்வதேச சமூகத்தின் அத்துமீறிய தலையீடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் முடக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 03 மாதங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பிலுள்ள பெல்லன்வில ரஜமகா விகாரையில் விசேட வழிபாடொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு விரைந்தேன்.

அங்கு சென்று பார்த்தவுடன் அவ்வாறான தாக்குதல்களை சாதாரண மனிதர்களால் மேற்கொள்ள முடியாது என்றும் மாறாக வெளிநாட்டுக் குழுவொன்றின் வழிநடத்தலின் கீழ் இப்படியான தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டேன்.

சாதாரண முஸ்லிம் மக்களால் இப்படியான மூர்க்கத் தனமான தாக்குதலை நடத்தமுடியாது. ஆகவே சர்வதேச ரீதியிலான தீவிரவாதக் குழு அன்று தற்கொலைத் தாக்குதலை நடத்திய நபர்களை தங்களது இலக்குகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அப்போது நாட்டில் குழப்பநிலை ஏற்பட்டு நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முயற்சி இடம்பெற்ற போதிலும் அதற்கு நாம் இடமளிக்கவில்லை. கலவரங்கள் ஏற்படுவதை பௌத்த தர்மத்தினூடாக கற்றுக்கொண்ட பொறுமையினால் தவிர்த்துக்கொள்ள முடிந்தது.

நேற்றுடன் மூன்று மாதங்களாகியும் இந்தக் கலவரத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாமற் போயுள்ளது.

ஐநா சபையின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவந்த புலனாய்வாளர்களை கைதுசெய்து ஒட்டுமொத்த புலனாய்வுக் கட்டமைப்பையும் சீர்குழைத்துவிட்டது.

இதேவேளை, இலங்கை பிரதான மதக் கலாசார உரிமை பௌத்த தர்மமாகும். இது ஏனைய மதத்தவர்களுக்கும் அதேபோல எமக்கும் மிகப்பெரிய சக்தியாகும். பௌத்த மதத்தின் நிழல் எமக்கு சிறுவயதிலிருந்தே கிடைத்திருக்கிறது.

புத்த பெருமானின் உபதேசங்களில் காணப்படும் பிரதான விடயங்கள் எமது வாழ்க்கைக்கும் பொருந்தும். ஆகவே பௌத்த மதம்தான் இந்த நாட்டின் பிரதான கலாசார உரிமையாக நான் பார்க்கின்றேன்.

பௌத்த கலாசார, பழக்க வழக்கங்களை நாங்கள் பாதுகாப்பது அவசியம். அரசியல் மேடைகளில் சிலர் தெரிவிக்கின்ற விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்குமார்கள் மீது எமக்கு சிறந்த நேசமுள்ளது.

மூளை சிதைந்த சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்ற விடயங்களினால் பௌத்த பிக்குகள் வீணாக குழப்பமடைய வேண்டாம். மகாநாயக்க தேரர்கள் இந்த நாட்டிற்காக செய்கின்ற பணிகள் முக்கியமானவை என்றே நாம் கூறுகிறோம்.

இந்த நாட்டில் யார் எந்த மதத்தை பின்பற்றினாலும் இந்த நாட்டின் ஒரேயொரு உரிமையாக - மதமாக பௌத்த மதம் விளங்குகின்றது என்பதை மிகத்தெளிவாக ஏற்றுக்கொள்கின்றோம். அதனை யாராலும் மாற்ற அவசியமில்லை.

சிலர் நாத்திக கலாசாரத்தை தலையின்மேல் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் சென்றே இந்தப் பழக்கத்தைப் பற்றிக்கொண்டுள்ளனர். இந்த நாத்திக பழக்கவழக்கங்கள் வெளிநாடுகளில் இருந்தவை.

மேற்குலக நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் என்றபோதிலும் அங்கு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. அதனால் பௌத்த மதக் கலாசாரத்தைக் கொண்ட இந்த நாட்டிற்குள் இன்னுமொரு மதத்தைப் பின்பற்றும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

ஆகவே அந்த முட்டாள்களின் மூடத்தமான பேச்சுக்களையிட்டு குழப்பமடையத் தேவையில்லை” என கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.