ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சி குறுகிய நோக்கத்துடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற ஒரு லட்சம் காணி உறுதிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எப்படியான தடைகள் வந்தாலும் அரசாங்கம் தளராது முன்னோக்கி செல்லும். நாட்டின் எதிர்க்கட்சி, அரசாங்கம் செய்யும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. செய்யும் வேலைகளை விமர்சிப்பதுமில்லை.
எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றலாம் என்றே எதிர்க்கட்சியினர் எண்ணுகின்றனர். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் மக்களுக்கு சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க முடிந்தது.
அந்த இடத்தில் இருந்து உலகம் செல்லும் வேகத்திற்கு ஏற்ப நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.