2005ஆம் ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிதான் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுஜன பெரமுன கட்சி என்பது கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை விட அதிக ஆசனம் பெற்ற கட்சியாகும்.
இத்தகைய தேசிய கட்சி தன்னுடன் இணைந்து செயற்பட முன் வருமாறு உலமா கட்சிக்கு அழைப்பு விடுத்ததுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டதன் மூலம் அக்கட்சி இனவாதமற்ற கட்சி என்பது வெளிப்படையாகியுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக உலமா கட்சி உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் முதலாவதாக இணைந்து கொண்ட முதலாவது முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும் என்பது வரலாறாகும்.
இது எமது இடைவிடாத அரசியல் செயற்பாட்டுக்கும் நேர்மையான அரசியலுக்கும் கிடைத்த பெருமையாகும். பொதுவாக முஸ்லிம்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதையே விரும்புவர்.
காரணம் அரசியல் என்றால் அதன் மூலம் சுயநலன்கள் பெற வேண்டும் என்பதுவே பெரும்பாலான முஸ்லிம்களும் எண்ணமாகும்.
இதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் என்பது சந்தர்ப்பவாத, சுயநலவாத அரசியலாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி சிங்கள மக்களின் செல்வாக்குள்ள எதிர்க்கட்சிகளிலும் முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை நாம் வழிகாட்டியுள்ளோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது தமிழ் கூட்டமைப்பின் சூழ்நிலைக்கைதியாக ஐக்கிய தேசிய கட்சி மாறியுள்ளது.
தமிழ் கூட்டமைப்பு பலமாக உள்ள கட்சியினால் முஸ்லிம் சமூகம் எந்த உரிமையையும் பெற முடியாது. மாறாக இருப்பதையும் இழக்க வேண்டி வரும் என்பதை முஸ்லிம் சமூகம் நிறையவே படித்து விட்டது.
இதனை ஒரு பாடமாகக்கொண்டு சிங்கள மக்களின் 70 வீத ஆதரவு கொண்ட பொதுஜன பெரமுன கட்சியை பலப்படுத்த முஸ்லிம்கள் முன் வரவேண்டும். எதிர் காலத்தில் யார் ஆட்சியமைப்பார் என்பதை நாம் சொல்ல முடியாது.
அது இறைவன் கையில் உள்ளது. ஆனாலும் ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் என்பது உறுதியானதாகும். அந்த வகையில் நாம் பொதுஜன பெரமுனவுடனும் எமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
98 வீதம் முஸ்லிம்கள் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசுக்கு வாக்களித்தும் அடியும் உதையும் அவமானம்தான் மிச்சம். ஆகக்குறைந்தது 99வீதம் இந்த ஆட்சிக்கு வாக்களித்த கல்முனையை கூட நம்மால் காப்பாற்ற முடியாமல் உள்ளது.
முதுகில் குத்தும் நண்பனை விட நேருக்கு நேர் மோதும் எதிரியால் நமக்கு பாதிப்பு குறைவு என்பதை நாம் புரிய வேண்டும்.
எதிர் காலத்தில் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் உலமா கட்சி அதன் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தர முடியும்.
இதற்கு வழியமைக்கும் வகையில் முஸ்லிம்கள் உலமா கட்சி மூலம் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.