ராஜபக்ச குடும்பத்திற்குள் உக்கிரமடையும் நீயா, நானா போட்டி!

Report Print Rakesh in அரசியல்
217Shares

அரச தலைவர் தேர்தல் விவகாரத்தால் ராஜபக்ச அணிதான் துண்டு துண்டாக உடையப்போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிளவும் ஏற்படாது. அப்படிப் பிளவு ஏற்பட எமது கட்சியின் உயர்பீடம் இடமளிக்கப்போவதும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தோற்பது உறுதி எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர் யார் என்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் எமது கட்சிக்குள் மும்முனைப் போட்டி நிலவவில்லை. அதாவது, தேர்தலில் போட்டியிடத் தகுதியான மூவரின் பெயர்களை எமது கட்சியினர் மும்மொழிந்துள்ளனர்.

கட்சியின் உயர்பீடமே இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதன் பின்னர் வேட்பாளர் யார் என்ற விபரம் வெளியாகும்.

அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச அணிக்குள் தான் முரண்பாடுகள் எழுந்துள்ளன. வேட்பாளரின் பெயரைத் தெரிவு செய்வதில் அந்த அணியினர் திக்குமுக்காடுகின்றனர்.

ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மூன்று சகோதரர்கள் நானா, நீயா என்று போட்டி போடுகின்றார்கள். ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் எவரும் போட்டியிட அந்த அணியிலுள்ள பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. மீண்டும் குடும்ப ஆட்சியை அந்த அணியிலுள்ளவர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் விரும்பவில்லை.

ராஜபக்ச அணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால் அந்த அணியைச் சேர்ந்த சிலர் எமது கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

எனவே, ராஜபக்ச குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு தமது அணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.

மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் இந்த நாடு அடிமைப்பட மக்கள் ஒருபோதும் விரும்பமமாட்டார்கள், அனுமதிக்கமாட்டார்கள்.

ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் நாட்டு மக்கள் வெற்றியடையச் செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.