தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என நடிகரும், கவிஞரும், அரசியல் செயற்பாட்டாளருமான வ.ஐ.ச.ஜெயபாலன் என கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கேள்வி - ஈழப்போர் முடிவிற்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?
பதில் - பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ, பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்து கொண்டிருந்திருந்தால், தமிழ் நாட்டின் வரலாறு மாறியிருக்கும்.
நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராக போராடி அழிந்து கொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை.
அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாக தமிழர் வாழ்க்கையை செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார்.
அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால் தலைமையில் இருக்கும் போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர் மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன.
ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.