கோத்தாவின் வீட்டில் நள்ளிரவில் கூட்டமைப்பின் எம்.பி! மூன்று மணி நேரம் நடந்தது என்ன?

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நேற்று இரவு 3 மணிநேரம் அவரது வீட்டில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பிற்காக 1 மணித்தியாலம் அனுமதி பெற்று 3 மணித்தியால நீண்ட சந்திப்பில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் ஒன்றின் தலைவரான குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த காலங்களில் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் நெருங்கிய நட்புறவை பேணி வந்துள்ளார்.

அந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச அங்கம் வகித்த ஆயுத குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அமைச்சில் இருந்து மாதாந்த ஊதியத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

பின்னர் மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அரசியல் தூரநோக்கும் உயர்ந்த சிந்தனையாலும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

பின்னர் நாடாளுமன்ற சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியினைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஒரு மணி நேர அனுமதி பெற்று மூன்று மணி நேரங்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக கோத்தபாயவுடன் பேசிய விடயம் என்ன என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

இன்று வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாய்திறக்காத எவ்வித கருத்துக்களையும் பதிவு செய்யாத இந்த நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றையதினம் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியமை பல மர்மங்களைத் தோற்றுவித்துள்ளது.

நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவே இரவு 7.30 மணியளவில் குறித்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என அறியகிடைத்துள்ளது.

தமிழ் மக்களிடத்தில் இரட்டைமுகம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உண்மை நிலைப்பாட்டினை மக்கள் மத்தியில் கூற தயங்குவது ஏன் என்ற வினா அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், குறித்த தகவல் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஊடாகவே ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.