எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது அப்பட்டமான பழிகளை அள்ளிப் போடாதீர்கள்: அப்துல்லா மஹரூப்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர் மீது வீண் பழி சுமத்தி அப்பட்டமான பழிகளை அள்ளிப் போடாதீர்கள் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று மாலை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

முன்னாள் அரசாங்கம் ஊடாக 2014ஆம் ஆண்டில் சகல விதமான திணைக்களங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடனுமே மட்டக்களப்பு கம்பஸ் கட்டி முடிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் என்ற காரணத்துக்காக அவர் மீது வீண் பழி சுமத்தி அப்பட்டமான பழிகளை அள்ளிப் போடாதீர்கள்.

இந்த உயர்ந்த சபையில் இரு குழுக்களை நியமித்து நீதியான விசாரணை நடத்துங்கள். சகல ஆதாரங்களையும் அன்றைய காலம் முதல் இன்று வரையில் வழங்கி நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளையும் தொடர்புகளையும் கொண்டுள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்மை நிலையை கண்டறிந்து உலகிற்கு அறிவியுங்கள். உயர்தரமான பாடநெறிகளான சிவில் என்ஜினியரிங், இலக்ட்றிக் என்ஜியரின், தொடர்பாடல் தொழில்நுட்பம் உட்பட எட்டு வகையான முக்கிய பாடநெறிகளே இங்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

மாறாக அங்கு வேறு வகையான பிழையான அடிப்படைவாத வழிகாட்டல்கள் நடைபெறவில்லை.

பிழையாக விளங்கிக் கொண்டு இந்த சபையில் இருக்கும் சிலர் இது தொடர்பில் பிழை இருப்பின் 225 உறுப்பினர்களுக்கும் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழையுங்கள்.

வருடாந்தம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 198,000 மாணவர்கள் தோற்றுகிறார்கள். இதில் 28,000 மாணவர்களுக்கே அரச உள்வாரி பல்கழைக்கழக வாய்ப்பு கிட்டுகிறது.

17,000 மாணவர்கள் வீதியில் அலைந்து திரிவதை தடுக்கவே இவ்வாறான நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பங்கு வகிக்கக் கூடிய பாடநெறிகளை இவர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.

இதை விடுத்து முஸ்லிம் என்கிற காரணத்துக்காக பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புப்படுத்தி வேறு திசைக்கு திருப்ப முனைவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அடைந்த துன்பங்களை முஸ்லிம் சமூகம் இணைந்து துயர் துடைக்கிறோம். மனவேதனை அடைகிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதத்தை விரும்புவதில்லை. சபையில் சபாநாயகருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகிறேன்.

உண்மை நீதியை நிலைநாட்ட கண்டறிய உயர் சபையில் குழுக்களை அமைத்து விசாரியுங்கள் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.