பிரதமருக்கு கிடைக்காத ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைத்துள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தோல்வியான அரசாங்கம் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் கமத்தொழிலாளர் அமைப்பான அகில இலங்கை கமத்தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக பல தகவல்கள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே நாங்கள் அதற்கு முழுமையாக ஆதரவை வழங்கி வருகின்றோம்.தாக்குதல் தொடர்பான தகவல் பிரதமருக்கு வரவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்கின்றது.

மேலும் சில அமைச்சர்களுக்கு கிடைத்துள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தையும் அறிந்துள்ளார். பேஸ்புக் மூலமே ஜனாதிபதி அறிந்து கொண்டாராம்.

இவை அனைத்தையும் பார்க்கும் போது அங்கொடை பைத்தியக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அமைச்சரவையை நினைக்கும் போதும் அதுதான் தோன்றுகிறது.

இதனால், இவர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். பிரதமர் அறிந்திருக்கவில்லை என்பது நம்பக் கூடிய விடயமல்ல. அப்படியானால் இந்த பிரதமர் பதவி எதற்கு.

அவருக்கு பதிலாக பொம்மை இருந்தால் நல்லது. அரசாங்கத்திற்குள் ஐக்கியமில்லை எனவும் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.