ஐ.தே.கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஜனாதிபதித் தேர்தலுக்கு நன்மையானதல்ல: திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினை ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் நன்மையாக அமையாது என அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அணியினர் இது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் பெரும்பாலான மக்கள் விரும்பும் நபரை தெரிவு செய்து, வெற்றிக்காக அனைவரும் இணைந்து பணியாற்றக் கூடிய முழுமையான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்,

எதிரணியினர் ஏற்கனவே தமது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கு இணையாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்காது போனால், பிரச்சார நடவடிக்கைகள் வீழ்ச்சியடையும் என்பது மாத்திரமல்ல, மக்களை கவரும் வேலைத்திட்டமும் ஸ்தம்பிதமடையும்.

நடு நிலையான வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவரக் கூடிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாது போனால், எந்த வேட்பாளருக்கும் வெற்றி பெற முடியாது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியவர் என்ற விடயமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

பொருத்தமற்றவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் நாடு மிகப் பெரிய பாதாளத்திற்குள் விழும். இதனை நான் 4 வருடங்களுக்கு முன்னரே கூறினேன். இதன் காரணமாவே நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.