நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக கூட்டத்திற்கு அழைத்துள்ள பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 9 மணிக்கு அலரி மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

எந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைக்கிறார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ள மனு தொடர்பாக பிரதமர் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக அலரி மாளிகையின் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதற்காக உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கும் கடிதத்தில் கையெழுத்துக்கள் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்.பீ பெரேரா, இரான் விக்ரமரத்ன, சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஆகிய அமைச்சர்கள் கையழுத்து பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் 77 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த கடித்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியை ஏற்படுத்திய பின்னர், அதன் மூலம் முன்வைக்கப்படும் யோசனைக்கு அமையவே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என பிரதமர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் சஜித் பிரேமதாசவை அண்மையில் அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய கட்சியை தவிர ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படும் வரை கூட்டணி தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட போவதில்லை என அறிவித்துள்ளன.

முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சியிலும் அரசாங்கத்தின் ஏனைய தரப்பினரும் கொடுத்து வரும் அழுத்தத்திற்கு அடிப்பணிவதை தவிர பிரதமருக்கு மாற்று வழியில்லை எனவும் புதிய கூட்டணியில் பதவிகளை எதிர்ப்பார்த்திருந்த சில அமைச்சர்கள் கூட இதனைக் கூறி வருவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.