என்னை ஜனாதிபதியாக்குங்கள்! உங்கள் காலடியை தேடி வருவேன்: மன்னாரில் சஜித்

Report Print Ashik in அரசியல்

எதிர்வரும் நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி சரியான தீர்வை எடுப்பீர்களாக இருந்தால் இந்த தீர்வு இலங்கை மக்களுக்கும் உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால் நான் மீண்டும் வந்து மன்னாரில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் ஜோசப்வாஸ் நகரில் இன்று இரண்டு மாதிரிக் கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் அங்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வீடமைப்பு அமைச்சினை நான் கடந்த 2015ஆம் ஆண்டு பொறுப்பெடுத்தேன், நான் அமைச்சினை பொறுப்பெடுக்கும்போது ஏற்கனவே இருந்தவர்களுக்க கூட தெரிந்திருக்கவில்லை இந்த நாட்டில் எத்தனை நபர்களுக்கு வீடுகள் தேவை என்பது.

நான் அனைத்து அரிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தேன். இந்த நாட்டிலே காணப்படுகின்ற வீடுகளின் குறைபாடுகளை தயவாக எனக்கு சமர்ப்பிக்குமாறு கோரி இருந்தேன். அதன் அடிப்படையில் 25 இலட்சம் வீடுகள் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது. 25 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் உடனடியாக இன்னும் ஓர் தீர்மானத்திற்கு வந்தோம். இந்த வீடுகளை அமைப்பதற்கு அடுத்த கட்டமாக ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தோம்.

எதிர்கால நோக்கத்தோடு, எமது வேலைத்திட்டங்களை நாங்கள் வரிசைப்படுத்தியுள்ளோம். முதல் கட்டமாக 2500 வீடுகளையும், 2ஆம் கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆயிரம் வீடுகளையும், 3ஆம் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளையும் அமைக்க உள்ளோம்.

உடனடியாக வெற்றி காண்பதற்காக குறித்த வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதிலே முதல் கட்டமாக 8500 வீடுகளை இம்மாதம் அல்லது செப்டெம்பர் மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் திறமையான அதிகாரிகளின் சிறப்பான கடமையினால் செப்டெம்பர் மாதம் வரை கொண்டு செல்லாது ஜூலை மாதம் அந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

எனவே நாங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருக்கின்றோம். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் துரித கதியில் நிறைவுக்கு கொண்டு வர இருக்கின்றோம். நவம்பர் மாதம் உங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான மாதமாக இருக்கின்றது.

நவம்பர் மாதத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, சரியான தீர்வை நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் இந்த தீர்மானம் இலங்கை மக்களுக்கும், உங்களுக்கும் சரியான தீர்மானமாக இருக்குமாக இருந்தால் நான் மீண்டும் வந்து மன்னாரில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த வீட்டு பிரச்சினைகளுக்கும் 2025ஆம் ஆண்டிற்குள் தீர்வை வழங்குவேன்.

எந்த ஒரு நாடாக இருந்தாலும், பாரிய சேதம் ஒன்று ஏற்பட்டவுடன் உடனடியாக சேதம் ஏற்பட்ட இடங்களை மீள கட்டி எழுப்ப துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். சில நாடுகளில் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. யுத்தம் நடக்கும் போது பிரதேசங்கள், நாடு ரீதியாக சேதம் ஏற்படும்.

யுத்தம் நிறைவடைந்து சமாதான காலம் ஏற்படும் போது சேதமடைந்த அந்த பகுதிகளை மீண்டும் நிர்மாணிப்பார்கள். அவ்வாறு நிர்மானப்பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பை உருவாக்குவார்கள். அந்த அமைப்பிற்கு சர்வதேச நிதி சம்மேளனம் என்று பெயர்.

அப்படியாக ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் ஊடாக சர்வதேச நாடுகளிடம் இருந்து நிதியை பெற்று சேதமடைந்த பகுதிகளை முற்று முழுதுமாக நிவர்த்தி செய்து முழுமையாக கட்டி எழுப்புவார்கள்.

நான் கூறுகின்றேன் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களை அண்மித்து விட்டோம். இன்று வரை இப்படியான ஒரு சர்வதேச நிதி சம்மேளனத்தை இவர்கள் உருவாக்கினார்களா என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை.

எமது நாட்டிலும் பெரிய அளவிலே யுத்தம் இடம்பெற்றுள்ளது. யுத்தம் இடம்பெற்றபோது அதிக உயிர்சேதம், அதிக பொருட்சேதம் ஏற்பட்டன.

ஆனால் அவற்றை மீள கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா இல்லை. யுத்தம் நிறைவடைந்து சில தினங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக பான்கீ மூன் இலங்கைக்கு வந்தார். அவர் வந்த போது இப்படியான காலத்தை உருவாக்கினார்களா?

நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாது நாட்டு மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை மேற்கொள்ளாத, யுத்த காலத்தில் சேதமடைந்த பிரதேசங்களை கட்டி எழுப்பாதவர்கள் இப்போது மீண்டும் ஒரு முறை ஆட்சியை தட்டிப்பறிக்க முற்படுகின்றார்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிட போகின்றேன். அவர் போட்டியிடப் போகின்றார் என கூறுகின்றனர். அவர்களின் குடும்பத்தில் சகோதரர்களை ராஜாவாக்க முற்பட்டார்கள். தற்போது மகனை ராஜாவாக்க முற்படுகின்றார்கள்.

எமது நாட்டிலே காணப்படக்கூடிய விடயங்களை நான் செய்ய வேண்டும். சர்வதேச நாடுகளுடன் பெரிய தொடர்பு இருப்பதாக கூறுகின்றார்கள் என்றால் ஏன் உருவாக்கவில்லை.

உங்களை பார்த்து நான் கூறுகின்றேன் எதிர்வரும் நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானம் நீங்கள் எடுப்பீர்களாக இருந்தால் நவம்பர் மாதத்திலே நாங்கள் ஆட்சிக்கு வந்து கடந்த 10 வருடங்களாக இங்கு அமுல் படுத்தப்படாத சர்வதேச நிதி சம்மேளனத்தை 6 மாத காலப்பகுதிக்குள் உருவாக்கி வடக்கு, கிழக்கில் உங்களை தேடி உங்கள் காலடிக்கு வந்து அபிவிருத்திகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வது வேறு யாரும் இல்லை சஜித் பிரேமதாஸ என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

நிவாரணம் பற்றி பேசுகின்றார்கள். நிவாரணம் பற்றி பேசியவர்கள் அன்று நாட்டு மக்கள் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு மாத்திரம் தேவையான அளவு சென்றார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று 5 அல்லது 7 என்கின்ற நட்சத்திர விடுதிகளிலே குடும்பமாக கும்மாளம் அடித்தார்கள்.

குடும்பமாக இவர்கள் கும்மாளம் அடித்தார்களே தவிர நாட்டு மக்களை பற்றியோ, மக்களின் பிரச்சினைகள் பற்றியோ அவர்கள் கருதவில்லை. அவர்கள் இன்று வெட்டி வீராப்பு பேசிக்கொண்டு மீண்டும் ஒருமுறை ஆட்சியை தட்டிப் பறிக்கக்கூடிய வீனான இந்த உதவாக்கரைகளினால் அன்று மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. குடும்ப ஆட்சியை கொண்டு வந்தார்கள். சுபபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஒரு காலத்திலே ராஜா வாழக்கூடிய அளவுக்கு சுகபோக வாழக்கையை நாட்டினுடைய மக்கள் மூலமாக பெற்ற வரிப்பணத்தின் மூலம் வாழ்ந்தார்கள். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து எங்களை ஆட்சிக்கு கொண்டு வரும் பொழுது நான் அவர்களைப் போல் ராஜாவாக நடந்து கொள்ள மாட்டேன்.

தற்போது உடுத்தியுள்ள இந்த உடையுடன் உங்களை தேடி வருவேன். உங்களின் பிரச்சினைகளை அடையாளம் காணுவேன். உங்களுடைய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பெற்று தருவேன். நல்ல ஆட்சியை நாடளாவிய ரீதியில் உங்களுக்கு ஏற்படுத்தி தருவேன்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற எங்களுடைய வேலைத்திட்டங்களையும் எங்களுடன் இணைந்துள்ள மக்களையும் பார்த்து அவர்களுக்கு பித்து பிடித்து விட்டது. அவர்கள் கூறுகின்றார்கள் சஜித் பிரேமதாஸவிற்கு வயது கொஞ்சம் காணாது என்று.

நான் கேட்கின்றேன் கடந்த 10 வருடங்களாக சர்வதேச தொடர்புகளுடன் பூந்து விளையாடிய நீங்கள் இந்த நாட்டிலே சர்வதேச நிதி சம்மேளனத்தை உருவாக்கினீர்களா? இல்லை யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி சிந்தித்தீர்களா? இல்லை.

இவற்றை பற்றி சிந்திக்காது நாங்கள் வந்தால் ஆட்டை மாடாக்குவோம். அதை இதாக்குவோம் என கூறுகின்றார்கள். இல்லாதவற்றை எல்லாம் கூறுகின்றார்கள்.

எனவே நவம்பர் மாதத்திலே சரியான தீர்மானத்தை எடுங்கள். நாங்கள் மீண்டும் இந்த நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கின்றோம் குறிப்பிட்டுள்ளார்.