சுதந்திரக் கட்சியை எந்த கட்சிக்கு முன்னாலும் அவமதிக்க இடமளிக்க முடியாது: துமிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

தனித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணக்கத்துடன் செயற்படும் 18 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

தேர்தலில் வெற்றி பெற சரியான அணியை உருவாக்குவது எமது கட்சியின் எதிர்பார்ப்பு. ஜனாதிபதித் தேர்தலில் நடத்தப்படுமாயின் அதில் போட்டியிட கூட்டணியை உருவாக்க வேண்டும் என எமது கட்சி நம்புகிறது.

தனித்து போட்டியிட வேண்டும் என கட்சி நினைக்கவில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

எனினும் எந்த கட்சிக்கு முன்னாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அவமதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தொகுதி அமைப்பாளருமான பிரதிப் ஜெயவர்தனவும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதனையும் விற்பனை செய்ய முடியும் என்று நினைத்தே ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தீர்மானங்களை எடுக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்தன நடு நிலையான கொள்கை கொண்டவர்.

ரணில் விக்ரமசிங்க புதிய தாராளமயவாதி. ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் அல்ல எனவும் பிரதீப் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.