சூடுபிடித்துள்ள கொழும்பு அரசியல்! ரணிலுக்கு போட்டியாக சஜித்? நாளை அதிரடி சந்திப்புக்கு ஏற்பாடு

Report Print Murali Murali in அரசியல்
683Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் கட்சிக்குள் ஆதரவைத் திரட்டுவதற்காக நாளை ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புக்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் நாளை முழுவதும் தனித்தனி சந்திப்புக்களை நடத்த ஒழுங்கு செய்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனித்தனி சந்திப்புக்களை நடத்தவுள்ள பிரதமர் ரணில், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்கான வாக்கெடுப்பையும் நடத்த உத்தேசித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு போட்டியாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் முக்கிய சந்திப்பிற்குத் தயாராகி வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு அழைத்திருக்கும் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பாக அவர்களுடைய நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளவிருப்பதாக அறியமுடிகின்றது.

எது எவ்வாறாக இருப்பினும், நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைகள் கூட்டங்களில் மாத்திரம் நேரத்தை செலவுசெய்யவுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை இன்றைய தினமும் மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பை நடத்தியிருப்பதாக தெரியவருகின்றது.