டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியார் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க ஆகியோர் மாடுகள் என அண்மையில் டிலான் மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த மாடுகளுடன் சுதந்திரக் கட்சிக்கு எவ்வித முன்னேற்றமும் கிடையாது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் துமிந்த திஸாநாயக்க, அவர்கள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயவில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்று கொண்ட எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் விமர்சனங்களை செய்வதற்கு முன்னதாக தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருக்க வேண்டும்.

பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தால் ஓரளவு அதில் நியாயம் இருந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.