தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! - மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து

Report Print Rakesh in அரசியல்

நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர் என்று கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றவாறாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நேற்றிரவு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக் கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல.

சிறுபான்மை இன மக்களும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும் என்று பலர் கருதுகின்றனர். எனினும், இந்த இரு தேர்தல்களிலும் மூவின மக்களின் ஆதரவுடன் நாம் வெல்லுவோம் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.