வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி: சஜித் பிரேமதாச திட்டவட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி எனும் கூட்டணியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என நானும் பிரதமரும் இணங்கிக் கொண்டதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இப்படியான கூட்டணியை ஏற்படுத்த நான் 100 வீதமல்ல, லட்சம் வீதம் இணங்குவேன். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரும், கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பும் முக்கியமான கட்சிகளும் கொண்டு நிலைப்பாட்டுக்கு அமைய , ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி அமைக்கப்பட வேண்டும்.

நான் தனிப்பட்ட ரீதியில் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். அப்படி செய்தால் மாத்திரமே உத்தேச கூட்டணி அமையும் என்பது மட்டுமல்ல, மேலும் பல கட்சிகளும் நபர்களும் கூட்டணியில் இணைந்து அது வெற்றிகரமான கூட்டணியாக மாறும்.

தற்போது நடக்க வேண்டியது பொய்யான செய்தியை ஊடகங்கள் வழியாக பரப்புவது அல்ல. முதலில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து, பகிரங்கப்படுத்தியதன் பின்னர் கூட்டணிக்கான உடன்படிக்கை உருவாக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.