மஹிந்தவுடனான சந்திப்புக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, ஈரோஸ் அமைப்பின் தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சிலருடைய செயற்பாடே அது என ஈரோஸ் அமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரோஸ் அமைப்பின் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
அண்மையில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஈரோஸ் அமைப்பின் பெயரில் சிலர் சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால், அதற்கும் ஈரோஸ் அமைப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதுடன், அது ஈரோஸ் அமைப்பின் நிலைப்பாடும் அல்ல.
எமது அமைப்புக்கு புதிதாக நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கட்டமைப்புடன் எமது கட்சி இருந்து கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும், கட்சியின் தலைவர்கள் தாமே என கூறிக்கொள்ளும் சிலரும் கட்சியின் பெயரை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தியுள்ளதுடன், எமது கட்சிக்கு எதிராக வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்து கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கின்றனர்.
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்புக்களை நடத்துவதும், அவருடன் இணங்கி செயற்படுவதும் எமது நிலைப்பாடல்ல என்பதுடன் அந்த சந்திப்புக்கும் எமது அமைப்புக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.