இலங்கை மக்களுக்கு நாளைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் உள்ள மகிந்தானந்த அளுத்கமகே நிதியத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவி நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும். இதனையடுத்து 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்படுவார்.
நாளைய தினம் என்பது நாட்டு மக்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி, பிரதான வீதிகளுக்குள் பிரவேசிக்கும் இடங்களில் பாற்சோறு சாப்பிட்டு மகிழும் தினம்.
தேசிய பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற முடியாத ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் 5 அணிகளாக பிரிந்துள்ளது. இந்த பிளவுக்கு மத்தியில், ஐக்கிய தேசிய முன்னணிக்கு கூட்டணியை உருவாக்கவோ, ஜனாதிபதி வேட்பாளரை அறிக்கவோ முடியாது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்ப தகுதியுள்ள நாட்டின் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.