ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு? வெகு விரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிக்கும்

Report Print Thirumal Thirumal in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகு விரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 35 தனி வீட்டுத்திட்டத்தினை கொண்ட ஒ.ஏ.இராமையாபுரம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று காலை பத்திரிகை ஒன்றில் செய்தியொன்றை வாசித்தேன். அதில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், முறையாக வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஒரு அறிக்கை விட்டிருந்தார். அவருக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி காணியினை பெற்று தேசிய கட்டட ஆய்வு திணைக்களத்தின் ஊடாக அறிக்கையினை பெற்று அரசாங்கத்தின் அனுமதியோடு இந்த தனி வீட்டுத் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்.

நாங்கள் இந்த வீடமைப்பு திட்டத்தினை முறையில்லாமல் அமைக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் நான் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்வதை பொருத்து கொள்ள முடியவில்லை.

இதுவரை காலமும் மலையகத்தில் இருந்த அமைச்சர்கள், தலைவர்கள் மலையகத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்களே தவிர இது போன்ற கிராமங்களை அமைத்து கொடுக்கவில்லை நான் அமைச்சராக வந்த பிறகு தான் ஏழு பேர்ச் காணியில் பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த தனி வீட்டு திட்டத்தை மேற்கொண்டு வருகிறேன்.

இதனை பொருத்து கொள்ள முடியாத சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். யார் என்னை எந்த வகையில் விமர்சித்தாலும் நான் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு தான் இருப்பேன்.

அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு நான் வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டால், இந்த வீடமைப்பு திட்டத்தினை அமைச்சர் திகாம்பரம் மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தான் இதனை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அமைக்கபடும் வீடமைப்பு திட்டத்தில் ஒரு கூரை தகடு காற்றுக்கு அள்ளுண்டு சென்றால் அது திகாம்பரம் கட்டி கொடுத்த வீடு என விமர்சனம் செய்கிறார்கள்.

மக்களுக்கு தெரியும் திகாம்பரம் வந்த பிறகு மலையகத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று. மாற்றத்தை கொண்டு வர முடியாதவர்கள் தான் இன்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதேபோல் 50 ரூபா கொடுப்பனவை கட்டாயம் பெற்று தருவோம். ஆனால் 20 ரூபாவை பெற்று கொடுத்தவர்கள் கூறுகிறார்கள் நான் மக்களை ஏமாற்றுவதாக.

நான் ஒரு போதும் மலையக மக்களை ஏமாற்றமாட்டேன். நான் சொல்வதை செய்பவன் என குறிப்பிட்டுள்ளார்.