ஆளுமையுள்ள தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை! நிமல் சிறிபால டி சில்வா

Report Print Aasim in அரசியல்

இலங்கைக்கு தற்போதைக்கு ஆளுமையுள்ள தலைமைத்துவமே தேவைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளை, தெமோதரையில் ஊவா மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மின்தகன மயானத்தை பொதுமக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தற்போதைக்கு நம் நாட்டிற்கு ஆளுமையான, உறுதிமிக்க தலைமைத்துவப் பண்பு கொண்ட ஜனாதிபதி ஒருவர் தேவைப்படுகின்றார். அவ்வாறின்றி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

தலைவரின் பெயரைச் சொன்னாலே மற்றவர்கள் எழுந்து நிற்கக் கூடிய தலைவர் ஒருவர் இன்றி இந்த நாட்டை சீரமைக்க முடியாது. அவ்வாறான உறுதிமிக்க தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க பங்களிப்பதே இக்காலகட்டத்தில் நம் கடமையாக உள்ளது.

அந்தக் கடமையை, பொறுப்பை நாங்கள் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

அடிப்படைவாதத்துக்கு எதிரான, நாட்டின் பாதுகாப்பைக் குறித்து சிந்திக்கும் , பொதுமக்கள் மீது கரிசனை கொண்ட தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நெகிழ்வுத் தன்மையுடனும், பரந்தளவிலும் சிந்தித்து பொதுமக்களுக்குச் சார்பான தீர்மானமொன்றை எடுத்து அதனை பொதுமக்களுக்கு விரைவில் அறிவிப்போம். அதற்கான வழி தற்போது திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.