மகிந்த தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் உறுதியானது! இன்றிரவு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு விஜேராமயவில் இன்றிரவு இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் என்பதை எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோட்டாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன்போது நாளைய தினம் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கான அனுமதியை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.