கோத்தபாய வேட்பாளராக நிறுத்தப்படுவதை கூட்டு எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் விரும்பவில்லை?

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ராஜபக்ச குடும்பத்தினர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரிதாக விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களை அண்மையில், தனித்தனியாக சந்தித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, அவர்களை சமாதானப்படுத்த பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

இம்முறை கோத்தபாய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவித்தாலும் எதிர்காலத்தில் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்படும் விரிவான கூட்டணியின் சார்பில் வேறு ஒருவர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மகிந்த ராஜபக்ச இந்த தலைவர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள குறித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதன் மூலம் அவர் எதிர்க்கட்சிகளின் உத்தியோபூர்வமற்ற தலைவராக மாறுவதை எவரும் தடுக்க முடியாது என கூறியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், அவரை நாடு முழுவதும் கொண்டு செல்ல, கோத்தபாய தலைமையிலான வியத்மக அமைப்பில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகள் முன்வைத்துள்ள யோசனைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர். இதனை மகிந்த ராஜபக்ச அமைதியாக கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச, எதிர்க்கட்சி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என உறுதியாக கூறப்படுகிறது.

Latest Offers