தமிழர்களிடம் எந்த முகத்துடன் வாக்குக் கேட்பார் கோத்தபாய? பொன்சேகா

Report Print Rakesh in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமிறங்கினால், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்குத் தயாராகவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

"போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தனர்.

இதன்போது, கோத்தபாய ராஜபக்ச களமிறங்கினால், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சரத் பொன்சேகாவைக் களமிறக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"ராஜபக்சவின் முழுக் குடும்பத்தையும் தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். தமிழ் மக்களின் அவலங்களுக்கு ராஜபக்ச அரசின் சர்வதிகார ஆட்சியே காரணமாகியது. உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி அவரைத் தோற்கடித்தார்கள். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராகக் களமிறங்கினால் அவருக்கும் தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயங்க மாட்டார்கள்.

போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்? இவருக்கு வெட்கமில்லையா?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்க நான் எந்நேரமும் தயாராகவுள்ளேன். இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உயர்பீடமே தீர்மானம் எடுக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு அமோக வாக்குகளை அள்ளி வழங்கிய போதும் நாடளாவிய ரீதியில் மஹிந்த அரசு மறைமுகமாகச் செய்த வாக்கு மோசடியாலேயே நான் தோல்வியடைய நேரிட்டது என்றார்.

Latest Offers