கோத்தாவை விரும்புகிறதா அமெரிக்கா? மகிந்த - அமெரிக்க முக்கியஸ்தர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?

Report Print Sujitha Sri in அரசியல்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையிலேயே விஜேராமவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.ரெப்லிட்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு இன்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட உள்ளதாகவும், தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டதும் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்க முக்கியஸ்தர்களுடனான மகிந்தவின் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை அரசியல் அவதானிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் இந்த சந்திப்பு திடீரென ஏன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

உண்மையில் இந்த சந்திப்பிற்கும், இன்றைய அறிவிப்பிற்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்பார்க்கப்பட்டது போல இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனில் அதன் பின்னணியில் அமெரிக்காவின் செயற்பாடு உள்ளதாக கொள்ள முடியும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் பின்னரும் மகிந்த, கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பாராயின் அமெரிக்காவிற்கு மகிந்த கூறவுள்ள செய்தி என்ன என்பதும், இதன் பின்னரான அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன மாதிரி இருக்கும் என்பதுடம் கேள்விக்குறியே.

Latest Offers