மகிந்த தெரிவு செய்யும் வேட்பாளருக்கு ஆதரவு: வரதராஜ பெருமாள்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கும் என தமிழ் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு, கிழக்கு மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சிக்கு வரும் புதிய ஜனாதிபதியின் மூலம் அரசியல் உரிமைகள் இல்லாவிட்டாலும் மிகப் பெரிய அபிவிருத்தியேனும் நடக்கும் என்பதால், இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் பெருமாள் கூறியுள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரும், இன்று வரையும் பாரிய அழிவுகளை ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்தியது.

இந்த கட்சியே அன்றில் இருந்து இன்று வரை பல கலவரங்களை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் சுதந்திரத்தை முழுமையாக இல்லாமல் செய்தது.

சிங்களம் மட்டும் சட்டம், 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, வெலிகடையில் கைதிகளின் கொலை, போன்ற பல குற்றங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் நடந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி 2015ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்துள்ள 5 வருட காலத்தில் எந்த வேலைகளையும் செய்யவில்லை.

இந்த அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த வேலையையே செய்தது.இதனால், தமிழ் மக்கள் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்ற வகையில், நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பட்டினியை போக்கவும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் போரில் அழிந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடிந்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதால், அவரை ஆதரிக்க தீர்மானித்தோம்.

மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் போதாது என்பதை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதேபோல், மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர். எனினும், நாட்டில் போர் ஏற்பட காரணமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி கூறுவதை ஏற்க வேண்டிய தேவையில்லை. பலருக்கு இது மறந்து போயுள்ளது எனவும் வரதராஜ பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers