தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு இவற்றை அடைவதே கட்சியின் இலக்கு: விக்னேஸ்வரன்

Report Print Theesan in அரசியல்

தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவை அடைவதே எமது கட்சியின் இலக்கு என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்றையதினம் காலை தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

வவுனியாவில் கட்சிகாரியாலத்தை திறந்து வைப்பதில் பெருமையடைகின்றேன். எமது கட்சி இளம் கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை. எனவே நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகின்றோம்.

எங்களை தேடிவருகின்ற மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற நிலையை மாற்றி உரிய இடங்களிலலேயே தமது குறைகளை கூறி எம்முடன் அளவளாவதற்காகவும், அவர்களின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே இந்த கட்சி காரியாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எங்களிற்கு நிதி பற்றாகுறை இருந்தாலும் புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களின் மூலம் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றோம். அத்துடன் கட்சி ரீதியாக எங்களுடன் இணைந்து பயணிப்பவர்களும் இங்கு வந்து செயற்படலாம்.

எமது கட்சி மூன்று விதமான அடிப்படை கொள்கைகளை கொண்டுள்ளது. முதலாவது தன்னாட்சி, வடகிழக்கு இணைந்த நிலையில் தமிழ்மக்கள் தம்மை தாமே நிர்வகிக்ககூடிய அதிகாரங்களை பெறவேண்டும்.

அரசு வடகிழக்கை மேலும் பிரிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றன. அதனால் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் வசிக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே அரசியல் ரீதியாக தன்னாட்சியை பெறுவதற்கு நாம் பயணிக்க வேண்டும். அடுத்து தன்னாட்சி என்று அரசியல் ரீதியாக செயற்படும் போது எமது வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக தற்சார்பு என்ற அடுத்தகொள்கையை நாம் வகுத்துள்ளோம்.

நாம் எப்பொழுதும் அடுத்தவரை பார்த்து அவர்களிடம் பிச்சை கேட்கும் நிலையை மாற்றி எங்களை நாங்கள் மேம்படுத்த முடியுமா என்பதை பார்க்க வேண்டும் என்று எமது அறிவுரைகளுடன், உங்களுடன் இணைந்து அவற்றை செய்ய எமது கட்சி காத்திருக்கின்றது.

மூன்றாவதாக தன்னிறைவு. வடக்கு கிழக்கு மக்கள் பொருளாதார ரீதியாக தங்களை வளர்த்து கொண்ட தன்னிறைவு பெறக்கூடிய ஒரு பிராந்தியமாக வரவேண்டும் என்பது எமது அவா. அதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதனை நாம் அறிந்து ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எமக்கு தேர்தல் ரீதியான எண்ணங்கள் இருந்தாலும் அதனையும் பார்க்க மக்கள் ரீதியான மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு கட்சியாக வளரவேண்டும் என்பதே எமது அவா அதற்கு ஏற்றவிதத்தில் எமது செயற்பாடுகள் அமையும் என மேலும் தெரிவித்தார்.

Latest Offers