தமிழ் மக்களின் விரோதி கோத்தபாயவே!

Report Print Kumar in அரசியல்

தமிழ் மக்களினை பொறுத்தவரையில் கோத்தபாய தமிழ் மக்களின் விரோதியாகவே தமிழ் மக்களினால் பார்க்கப்படுவதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.அறக்கட்டளை நிதியத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் தமிழர்கள் சிங்கள தலைவர்களை நம்பி ஏமாந்த வரலாறே காணப்படுகின்றது. இறுதியாக 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஒட்டுமொத்த சிறுபான்மையினமும் ஜனாதிபதியாக்கி இன்று அவரை நம்பி ஏமாந்த நிலையில் இருக்கின்றோம்.

இன்னுமொரு தடவை சிங்கள தலைமைகளை நம்பி ஏமாறவேண்டிய நிலையில் நாங்களும் இல்லை,தமிழ் மக்களும் இல்லை.அதற்காக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் நிலையும் இல்லை.2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் தமிழ் மக்கள் என்ன கஸ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை நாங்கள் உணரவேண்டும்.

தமிழர்கள் தங்களது வாக்குகளை இந்த நாட்டில் ஜனாதிபதியாக வருபவருக்கு இனிமேல் வழங்கவேண்டுமாகவிருந்தால் அவரிடமிருந்து உறுதியான உறுதிமொழியொன்று வடகிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் உண்தையான கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாட்டின் மத்தியஸ்தருடன் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கி அதன் மூலம் உறுதி மொழி வழங்கப்படுவதன் ஊடாகவே ஒரு தலைவரை நாங்கள் ஆதரிக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் காணப்படுகின்றது.அதில் உள்ள புளோட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் கோத்தபாயவை சந்தித்து கலந்துரையாடியதாகவும், அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிருனமான என்.கே.சுமந்திரனும் கோத்தபாயவை சந்தித்ததாக அறிந்தோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரையில் கோத்தபாய தமிழ் மக்களின் விரோதி என்ற வகையிலேயே குறிப்பிட்டளவிலான தமிழ் மக்கள் பார்க்கின்றனர். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் கோத்தபாய ராஜபக்ஸ என்பதை இன்னும் தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் கடந்த கால இழப்பிற்கும் எமக்கு செய்யப்பட்ட அநியாயத்திற்கான நியாயத்தினையும் இந்த நாட்டில் இனியொரு அழிவு,போராட்டம் இடம்பெறாமல் இருப்பதற்கும் வடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளரை பரிசீலனை செய்யவேண்டும்.

அதனை விடுத்து தனிப்பட்ட ஒரு வேட்பாளருக்காக தனிப்பட்ட ஒருவரின் அபிலாசைகளுக்காக நாங்கள் செயற்படக்கூடாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.அவ்வாறான எந்த முரண்பாடுகளும் இல்லையென்பதே எனது கருத்து.

ஆனால் சில கோரிக்கைகளை முன்வைக்கும் போது அதனை சில வங்குரோத்து அரசியல் செய்வோர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உள்ளதாக பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers