முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சத்தியலிங்கத்தின் செயற்பாடுகளுக்கு இளஞ்செழியன் காட்டம்!

Report Print Vanniyan in அரசியல்

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் மற்றும் ரவிகரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணைப்பொருளாளரும் (அகில இலங்கை) ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் பகிரங்கமாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

நேற்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சத்தியலிங்கம், ரவிகரன் ஆகியோர் கரைதுறைப்பற்று பிரதேசத்தின் பொது அமைப்புகளை சந்தித்து குறை நிறைகளை கேட்டு அறிந்ததாக ஊடகங்கள் ஊடகவும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் அறிய முடிந்தது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒவ்வொருவரும் வேறுபட்ட கட்சிகளை சார்ந்தவர்கள். கரைதுறைப்பற்று பிரதேச பொது அமைப்புகளை சந்திப்பதாக கூறி இலங்கை தமிழரசுக் கட்சி உள்விவகாரங்களை அவர்கள் முன் பேசியமையும் மற்றவர்கள் கருத்து கூற அனுமதித்தமைக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் எமது கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள். சிலர் எமது கட்சி உறுப்பினர்கள் கூட இல்லை. இறந்த வீட்டில் திருமண வீடு நடந்ததுபோலே இவ் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

கட்சி சார்ந்த விடையங்களை சம்பந்தபடாத பலர் முன் பேசுவதை நிறுத்தி மாவட்ட கிளை அல்லது கட்சியின் ஆயுள் கால உறுப்பினர்கள் அல்லது கட்சியின் உறுப்புரிமை உள்ளவர் முன்பே பேசவேண்டும். மாற்று கட்சியில் இருந்து பதவி ஆசை ஆசனத்தை பெற்றுகொள்ள கட்சி தாவிவந்தவர்களுக்கு கட்சி கோட்பாடு தெரியாத விடையம்.

ஆகவே எமது கட்சியை நடுரோட்டில் போட்டு விற்று தங்களுடைய சுய இலாபம் தேட முயற்சித்தால் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டி வரும் எனவும் கட்சி விடையங்களை சம்பந்தப்படாத பொது அமைப்புகளுக்கு முன் பேச அனுமதி கொடுத்தது யார்?

கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்துக்கோ அல்லது பிரதேச சபைக்கோ உட்பட்ட பகுதியில் 200 மேற்பட்ட பொது அமைப்புகள் இருந்தும் ஒரு சில அமைப்புகளை மட்டும் அழைத்து இக் கலந்துரையாடல் நடாத்தியமை கண்டனத்துக்குரியது.

இக் கலந்துரையாடல் பொது அமைப்புகளுக்கு சொந்தமாக எத்தனையோ மண்டபங்கள் இருந்தும் குமுழமுனையில் அமைந்துள்ள ஒரு உப தபால் அலுவலக அதிகாரியின் வீட்டில் நடந்த சந்திப்பின் காரணம் என்ன? என்பதை பொது அமைப்புகளுக்கு பகிரங்கபடுத்த வேண்டும்.

அது மட்டுமல்லாமல் 20 தொடக்கம் 25 பேர் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இச் சந்திப்பானது கரைதுறைப்பற்று ஒட்டுமொத்த பொது அமைப்புகளின் சந்திப்பதாக கருத முடியாது. பல பொது அமைப்புகளை ஓரம் கட்டி விட்டு தங்களுக்கு பிடித்த சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அழைத்து இந்த கலந்துரையாடல் நடை பெற்றுள்ளது.

இச் சந்திப்பானது கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களின் தனிப்பட்ட எதிர்கால அரசியலை நோக்கியதாகும். தங்களுடைய தனிப்பட்ட சந்திப்புகளை நடாத்தி விட்டு கரைதுறைப்பற்று பிரதேச பொது அமைப்புகளை சந்தித்தது என கூறி பொய் பிரச்சாரம் செய்வதை வன்மையாக கண்டிப்பதோடு இனி வரும் சந்திப்புகளை அனைத்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடலை நடாத்த வேண்டும் அதே போல் தற்போது பதவி நிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் இக் கலந்துரையாடலுக்கு அழைக்க வேண்டும். அப்போது தான் உரிய இடத்துக்கு கொண்டு சென்று தீர்வு பெற முடியும். என தனது செய்தி குறிப்பில் பீற்றர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers