ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in அரசியல்

எங்களுக்கு உடன்பாடு இல்லாத வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் கொண்டு வந்தாலோ, தேவையில்லாமல் உட்கட்சி சண்டை போட்டு கொண்டு உங்கள் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவி நாறடித்தாலோ நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அமைச்சர் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறை - தெனியாவையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கூட்டணி அமைப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மையில் இங்கே பெரும் பிரச்சினையில்லை. குழப்பமடைய தேவையில்லை.

இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என நாம் தான் தீர்மானித்தோம். இந்த யோசனையை நானே முதலில் ஜனவரி மாதமே கட்சித்தலைவர் கூட்டத்தில் தெரிவித்தேன்.

ஏனெனில் கடந்த 2010ஆம் ஆண்டும், 2015ஆம் ஆண்டும் வெளியில் இருந்துதான் வேட்பாளர்கள் வந்தார்கள். 2010ஆம் ஆண்டு வந்த சரத் பொன்சேகா இப்போது ஐ.தே.கவுக்கு உள்ளே இருந்தாலும், அப்போது வெளியில் இருந்தே வந்தார்.

இந்த முறை ஐ.தே.கவின் உள்ளே இருந்து வேட்பாளரை தேர்வு செய்வதே நியாயமானது என நானே முதலில் சொன்னேன். ஆகவே இம்முறை நீங்களே தெரிவு செய்யுங்கள் என ஐ.தே.கவிடம் இந்த பொறுப்பை நாம் ஒப்படைத்து விட்டோம்.

ஆகவே ஐ.தே.கவில் உள்ள சேனநாயக்கவின், ஜயவர்தனவின், பிரேமதாசவின் புத்திரன்கள், பேரன்கள், கொள்ளுபேரன்கள் சிந்தித்து ஒழுங்கான முடிவை எடுங்கள்.

ஒருநாளில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவையும், நாடாளுமன்ற உறுப்பினர் குழுவையும் கூட்டுங்கள். தேநீர், கோப்பி வழங்குங்கள். கூட்டத்தில் எவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்பதை கண்டறியுங்கள்.

உண்மையில் இந்த தாமதத்துக்கு நாம் காரணமில்லை என்பதை நாடு முழுக்க உள்ள அடிமட்ட ஐ.தே.க தொண்டர்களுக்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் கட்சிக்குள் இருந்து வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் என நாம் இந்த பொறுப்பை ஐ.தே.க செயற்குழுவுக்கு ஒப்படைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.

ஆகவே தாமதம் அங்கேதான். மக்கள் விரும்பும் வேட்பாளரை பெயரிடுவதை ஐ.தே.கவின் உள்ளே இருந்து தடுத்து கொண்டு சிலர் இருக்கின்றனர். இவர்கள் எதிர்கட்சியுடன் இரகசிய உடன்பாடு கண்டுள்ளார்கள் எனவும் நான் சந்தேகிக்கின்றேன்.

இனிமேல் நாம் பொறுக்க மாட்டோம். எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உங்கள் வேட்பாளர் பெயரை எங்களுக்கு அறிவியுங்கள். நீங்கள் சொல்லும் வேட்பாளருடன் எமக்கு உடன்பாடு இருந்தால் நாம் உங்களுடன் வருகிறோம்.

இல்லாவிட்டால் வெளியேறுகிறோம். நீங்கள் உங்கள் வேட்பாளரை அழைத்துக் கொண்டு தேர்தலுக்கு செல்லுங்கள். ஜனாதிபதி தேர்தலின் வென்றால் போதாது. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்ல வேண்டும்.

அப்போதுதான் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.கவுடன் தான் நாம் வர வேண்டும் என்று சொல்லி எம்மை பயமுறுத்த முயல வேண்டாம். தமிழ் முற்போக்கு கூட்டணி நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட தயார்.

எங்களுக்கு உடன்பாடு இல்லாத வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் கொண்டு வந்தாலோ, அதேபோல் தேவையில்லாமல் உட்கட்சி சண்டை போட்டுக் கொண்டு, உங்கள் கட்சிக்குள் இருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவி நாறடித்தாலோ, நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.

எம்மை போலவே ஏனைய சிறு கட்சிகளும் வெளியேறும் என நான் நினைக்கின்றேன். அப்புறம் ஐ.தே.க தனியாக சுடுகாட்டுக்கு செல்லலாம். உங்களுடன் சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை.

இந்நாட்டின் மிகப்பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை அதற்குள்ளே இருக்கும் சிலர், இன்னமும் குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களுக்கு தலையெடுக்க விடாமல் அரசியல் புதைகுழியில் தள்ள முயற்சிக்கிறார்கள்.

கட்சிக்கு உள்ளே இருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அது நாம் அல்ல. அவர்கள் ஐ.தே.கவின் உள்ளேதான் இருக்கிறார்கள்.

நான் சொல்வதில் உள்ள உண்மையை நாடு முழுக்க உள்ள இலட்சக்கணக்கான ஐ.தே.கவின் அடிமட்ட உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers