தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்போதும் தடை! எங்களுக்குரியதை தான் நாங்கள் கேட்கின்றோம் - சுமந்திரன்

Report Print Rusath in அரசியல்

எங்களுக்குரியதை தான் நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பட்டிருப்பு தொகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்திருந்தால் செய்யக்கூடியதாக இருந்த விடயங்களை கூட முடியாதிருந்திருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.

இந்த ஒற்றுமையாவது இருந்திருக்காவிட்டால் இதுவரைக்கும் நாங்கள் செய்திருப்பதை கூட செய்திருக்க முடியாமல் போயிருக்கும். எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள் ஒன்று எங்களது ஒற்றுமை, மற்றையது சர்வதேசம். ஆகவே இவை இரண்டையும் இறுக பற்றி பிடித்து கொள்ள வேண்டும்.

இதனை கொண்டுதான் விடிவை நோக்கி நகர முடியும் சமாதான சூழ்நிலையிலே எதை செய்ய முடியும், எதை செய்ய முடியாது என்று வரையறை இருக்கின்றது.

அதேபோன்று தான் ஜனநாயக முறையிலே எதை செய்ய முடியும், எதை செய்யக் கூடாது என்ற வரையறை இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்போதும் தடை இருக்கின்றது.

அநியாயமான வேண்டுகோள்களை நாங்கள் விடுக்கவில்லை. அவர்களுக்குரியதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரியதை தான் நாங்கள் கேட்கின்றோம். இது நியாயமானது.

ஜனநாயக முறையிலே சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்று அவர்களது நாட்டிலும் இருக்கும் ஆட்சி முறைமைகள் பற்றி அதில் நியாயமானதை பற்றித்தான் கேட்கின்றோம்.

பெரும்பான்மையினத்தவர்களை எதிர்ப்பதை விட அந்த சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் ஆதரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலே நாங்கள் சரியாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்ற கருத்து பரப்பப்படுகிறது. அது தவறானது.

சிங்கள மக்கள் மத்தியிலே இருக்கிற முற்போக்கு சக்திகளோடு இணைந்து நாங்கள் பணியாற்றிருக்கின்றோம். சோபித தேரரின் முதலாவது கூட்டத்திலும் நாங்கள் பங்குபற்றி நாட்டில் பெரும்பான்மை மக்கள் மத்தியியில் எமது நியாயமான விடயங்களை எடுத்துக் கூறுவதில் முன்னின்று உழைத்தோம்.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதில் சோபித தேரர் எடுத்த முன்னெடுப்பு மிகவும் காத்தரமாக இருந்தது. எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தபோது சிங்கள மக்கள் எதிர்த்தார்கள்.

ஆனால் நியாயமான அதிகாரப் பகிர்வோடு ஆட்சியதிகாரங்ளைக் கோர முடியும். இதற்கு சர்வதேச ஆதரவும் இருக்கும். தன்னுடைய சட்டங்களை தானே அமுல்படுத்துகிற சுயாதீனம் ஒரு நாட்டுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், பிரதேசசபை தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers