கோத்தபாயவை ஆதரிப்பது தொடர்பான பேச்சுக்கு இடமில்லை! சி.வி.கே.சிவஞானம்

Report Print Sumi in அரசியல்

தற்போதைய நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற பேச்சுக்கு இடமில்லை என வடமாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவை ஆதரிப்பீர்களா என வினாவுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

சிங்கள மக்கள் மத்தியில் எமது கோரிக்கைகளை தெரிவித்து, அவற்றிற்கு ஒத்துழைப்பு தரக்கூடிய ஒருவரை ஆதரிப்போம்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்புக்கள் இடம்பெற வேண்டும்.

அவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெற்றால், தான் அவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியவரும்.

கோத்தபாய எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார் என்பது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை சந்தித்த பின்னரே தெரியவந்தது.

இல்லாவிடின், தெரிய வர வாய்ப்பு இல்லை. எல்லோருடனும் கலந்துரையாடுவதே தற்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அனைவருடனும் கலந்துரையாடிய பின்னர், எமது பேரம் பேசும் நிலைப்பாட்டிற்கு வருவோம்.

பூர்வாங்கம் தனியாக பேசலாம். ஆனால், கூட்டாகத் தான் பேச முடியும். பட்டறிவின் அடிப்படையில், சிங்கள மக்களுக்கு செய்யப் போவதை சொல்லி, அதனூடாக தமிழ் மக்களுக்கான தீர்வை தரக்கூடிய வகையில் ஒரு பேச்சுவார்த்தைக்கே செல்லவுள்ளோம்.

புதிய அரசியலப்பை உருவாக்காது, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கோத்தபாயவிற்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டா என வினவிய போது,

தற்போதைய நிலையில், கோத்தபாயவை ஆதரிப்பதா, அல்லது எதிர்ப்பதா என்ற பேச்சுக்கு இடமில்லை.

தற்போது பொதுஜன பேரமுன கோத்தபாய தான் எனச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி யார் என சொல்லவில்லை. ஜே.வி.பி. யார் என சொல்லவில்லை. ஜே.வி.பியின் கொள்கைகளைப் பார்த்து, ஜே.வி.பியினரும் பேசுவார்கள். அவர்களும் எங்களுடன் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

யார் கூடுதலாக எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றார்களோ, யார் எமது கோரிக்கைகளை ஆதரிப்பார்கள், அந்த ஆதரிப்புக்களை யார் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள். என்ற அனைத்தையும் பரிசீலித்து தான் முடிவுகள் எடுக்கப்படும்.

கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் இருக்கின்றதென்பதெல்லாம் தவறான கருத்து, தெரிவுகள் வெளிப்படையாக உள்ளன.

யார் எங்களுடன் ஒத்துழைத்து, எமக்கு யார் வெளிப்படையாக ஒத்துழைப்பு தரக்கூடியவர்களை தான் ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers