கடந்த மாகாண சபை தேர்தலில் 6,500இற்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்திருந்தால்...: பா.அரியநேந்திரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கடந்த மாகாண சபை தேர்தலில் 6,500இற்கு மேலதிகமான வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருந்தால் 2 ஆசனங்களை மேலதிகமாக பெற்றிருக்கலாம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் கிழக்கு மாகாண சபையை முஸ்லிம் காங்கிரசிற்கு விட்டுக்கொடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் இன்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது விடுதலைப்புலிகள் மெளனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டிற்கு பின்னரே முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கியது. அதற்கு முன் பகுதி நேர அரசியலிலே ஈடுபட்டது. முழு நேர அரசியலில் அப்போது விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர்.

அப்போது தலைவர் பிரபாகரன் ஈழம் கிடைக்கும் என கூறியதை நாம் நம்பித்தான் இருந்தோம். ஆனால், 2009 மே 19 இன் பின் அந்த கனவு தவுடுபொடியாகியது.

கடந்த மாகாண சபை தேர்தலில் 6,500 மேலதிகமாக வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருந்தால் 2 ஆசனங்களை மேலதிகமாக பெற்றிருக்கலாம்.

தமிழர்கள் 13 ஆசனங்களையும், முஸ்லிம்கள் 16 ஆசனங்களையும், சிங்களவர்கள் 08 ஆசனங்களையும் பெற்று கடந்த கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களே பலமான உறுப்பினர்களை வைத்திருந்து 04 கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்களே தவிர நாங்கள் கிழக்கு மாகாண சபையை முஸ்லிம் காங்கிரசிஸிற்கு விட்டுக்கொடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர முதல்வர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers