காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில்! இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள்? ராஜபக்ச தரப்பை அதிர வைத்த கருத்து

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை அறிவித்ததின் பின்னர் எதிரும் புதிருமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மகிந்த அணியின் சார்புடையவர்கள் மகிந்தவின் முடிவினை உச்சிமுகர்ந்து பேசிவரும் அதேவேளை மகிந்த எதிர்ப்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்றையதினம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்திருந்த அமைச்சர் மங்கள சமரவீர,


“ காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?”

இவ்வாறு கருத்திட்டு இருந்தார். இது தொடர்பாக இன்று டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ள நாமல் ராஜபக்ச,

“ அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் கடுமையான அதிருப்தியினை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்குவதாக மகிந்த அறிவித்த நேரத்தில் இருந்து அவருக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் வெள்ளைவான் கலாசாரம் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பில் அதிகளவில் பேசப்படுகிறது.

இக்கருத்துக்கள் சிறுபான்மை தரப்பினரின் வாக்குகளை கோத்தபாயவிற்கு முற்றாக இல்லாமல் செய்யப்படும் என்பதை கருத்தில் கொண்டுள்ள மகிந்த தரப்பினர் அதற்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்பில் அதிகளவான வாக்குறுதிகளை மகிந்த தரப்பினர் அள்ளி வழங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எதுவாயினும் மகிந்த ராஜபக்ச தரப்பினை எதிர்த்து வெற்றி பெறக் கூடிய வாக்காளரை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ரணில் தரப்பினர் மும்முரம் காட்டிவரும் அதேவேளை, தான் தான் ஜனாதிபதி வேட்பாளர் என சஜித் பிரேமதாச வெளிப்படையாக மேடைகளில் தெரிவித்துவருகின்றார்.

இதுதொடர்பில் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய முடிவினை வெளியிடுவார் என அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers