கோத்தபாய தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு? சந்திரிகா காட்டம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பெரும் எதிர்பார்ப்பிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தன்னுடைய ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவும் அக்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கோத்தபாய தான் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்.

மகிந்தவின் அறிவித்தலுக்குப் பின்னர் டுவிட்டர் தளத்தில் ஒரே நாளில் கோத்தபாய ட்ரென்ட்டானது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்ப ஆட்சி என்றும் ஊழல், கடத்தல் கப்பம் பெற்றவர்கள் என்று பெரும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டிருந்த தரப்பினர் தற்போது மீண்டும் கோத்தபாயவை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கோத்தபாய தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று தெரிந்தவுடன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பில் இன்று பேசிய அவர், “ கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவர். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது.

கடந்த மகிந்த அரசாங்கத்தின் போது, வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஊடகவியலாளர்கள் வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள்.

நான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு கதை பரவி வருகின்றது. நான் ஒரு போதும் அந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கமாட்டேன்.

கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது. அவர்கள் ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பெரிய ஆபத்தாகும்” இவ்வாறு கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

இதேவேளை, டுவிட்டர் தளத்தில் கருத்துப் பகிர்ந்த அமைச்சர் மங்கள சமரவீர, “ காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள்.

வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார்.

அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?” என்றும் கடும் தொனியில் கருத்துரைக்கிறார்.

இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசிய போது, “ ஜனாதிபதித் தேர்தலில் ஆயிரம் கோத்தபாயாக்கள் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெல்லுவார். இது உறுதி.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று எமது கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் தீர்மானிக்கும்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் கோத்தபாய ராஜபக்ச எமது கட்சிக்கு சவால் அல்ல. அவரின் உண்மை முகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நன்கு அறிவார்கள்.

சர்வதேசத்தின் மட்டத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றார்கள். இவர்களுக்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளினால் பாடம் புகட்டுவார்கள்” என்று முழங்கினார்.

ஆனால் வௌிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோத்தபாய தொடர்பில் தற்போதுவரை எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காது மௌனம் காத்துவருகிறார்.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்க கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோன்று கரு ஜயசூரியவும் நிறுத்தப்படலாம் என்று கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், கருவோடு மைத்திரி தொலைபேசியில் பேசியிருந்தார்.

அதேபோன்று கோத்தபாய ராஜபக்சவுடனும் தொலைபேசியில் மைத்திரி பேசியிருந்தார். ஆனால் அது தொடர்பில் எந்தவிதமான தகவல்களையும் மைத்திரி வெளியிடவில்லை.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

மைத்திரியின் இந்த மௌனத்திற்குப் பின்னால் இருக்கும் தந்திரம் என்ன என்பது தொடர்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதியாக மாத்திரம் அல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் கருத்துக்கள் அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.

மகிந்த மைத்திரிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாவற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இதன்படி மைத்திரிக்கு கௌரவமான பதவி ஒன்று காத்திருப்பதாகவும் அதற்கு மகிந்த தரப்பு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சி உறுப்பினர்களுடன் பேசிய பின்னர் மைத்திரி தன்னுடைய நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் அவரை மேற்கோட்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதுவாயினும் மைத்திரியின் முடிவுகள் வெற்றியாளர்களுக்கு கணிசமான பங்களிப்பினை செய்யும் என்றும் நம்பப்படுகிறது.

You my like this video