எங்களின் ஒற்றுமையே இந்த வெற்றிக்கு காரணம்!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மலையக அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை செலவிட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மொணராகலை கும்புக்கன் போகாலைன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு மின்சார விநியோகத்தை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 2013ம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மலையகத்திற்காக 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதியொதுக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றில் 5 வீடுகளையெனும் அவர்கள் கட்டவில்லை.

எனவே, முன்னைய அரசாங்கம் எப்போதும் மலையக மக்களுக்காக கண்துடைப்பான விடயங்களை முன்னெடுத்தாகவும் தற்போதே மலையகத்தில் உண்மையான அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பெருந்தோட்டங்களில் இருந்து லயன் என்ற தொடர் வீடமைப்பு முறையை முற்றாக ஒழிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி கொள்கையளவில் செயற்பட்டு வருவதாகவும் அவ்வாறான செயற்பாடுகளினால் மாத்திரமே மலையகம் கௌரவமான நிலைமைக்கு உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மலையகத்தின் அவமானச் சின்னமாக இருக்கும் லயன் அறைகளை ஒழித்து புதிதாக தனிவீட்டு திட்டத்தை அமுல்படுத்துவதே தமது கூட்டணியின் பிரதான இலக்கு எனவும் அவர் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் நிலவும் ஒன்றுமையின் காரணமாகவே பெருந்தோட்டங்களில் தனிவீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த செயற்பாடு தொடரும் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.