புதுடில்லி பறந்தார் சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோத்தபாய ராஜபக்சவை அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளருக்கான முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் சஜித் பிரேமதாஸவே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படுத்தவில்லை.

சகல கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரே தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்துவோம் என்று கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியே கடந்த காலங்களில் முடிவுகளை மேற்கொண்டிருந்தது.

தற்போதும் அவ்வாறானதொரு நடவடிக்கைக்காகவே சம்பந்தன் புதுடில்லிக்குச் சென்றிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அவர் தனது மருத்துவத் தேவைக்காகவே இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Latest Offers