இனத்தின்பால் அக்கறை கொண்டுள்ளவர்கள் இதனை செய்ய வேண்டும்! கி.துரைராஜசிங்கம்

Report Print Kumar in அரசியல்

வேடிக்கைக்காகவும், தாழ்வு மனப்பான்மையிலும், கற்பனாவாதத்திலும் மக்கள் மத்தியிலே பரப்பப்படும் கருத்துக்கள் நம் இனத்தைப் பலவீனப்படுத்தும் என்பதனை இனத்தின்பால் அக்கறை கொண்டுள்ளோம் என்று சொல்பவர்கள் தமது ஆழ் சிந்தனையிலே அதனை வைத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணம் - களுவாஞ்சிக்குடி, இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளைப் போல வெறுமனே ஒரு அரசியற் கட்சி அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம். மனித உரிமைகளை வென்றெடுத்தல் என்ற இலக்கிலே செயற்படுகின்ற ஒரு இலட்சிய இயக்கம்.

750,000 மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மனித அடிப்படை உரிமையை நிலைநாட்டுதல் என்னும் அத்திவாரத்தோடு தோன்றியது தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி.

அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியானதும், மீண்டும் தமிழ் அரசுக் கட்சியும், தோழமைக் கட்சிகளும் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதும் நமது விடுதலை நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே ஆகும்.

70 ஆண்டு காலமாக விடுதலையை இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற வரலாற்றைக் கொண்டவர்கள் நாம்.

அந்நியப் படைகளை அந்த நாட்டிலே இருந்து துரத்துவதால் அடைகின்ற விடுதலைக்கும், ஒரே நாட்டிலே உள்ள ஆதிக்க சக்தியினின்றும், ஆதிக்க சக்தியின் ஆக்கிரமிப்பினைத் தவிர்த்து அடைகின்ற விடுதலைக்கும் இடையிலே மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

நமது 70 ஆண்டுகால விடுதலை வரலாறு இந்த இரண்டாம் பகுதியிலேதான் அடங்குகின்றது.

நமது எதிர்த்தரப்பினரை நாம் உரிமைகோரும் பிரதேசத்தில் இருந்து முற்றிலுமே வெளியேற்றுகின்ற விடுதலை முயற்சியல்ல இது. அவர்களுடைய மேலாதிக்கத்தை இலதாக்கி ஒரு உள்ளக சுதந்திரத்தைப் பெறுகின்ற இந்த முயற்சி மிக மிகக் கடினமானது.

வடஅயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் போன்ற ஐக்கிய இராச்சியத்தின் பகுதிகள் தமது நூறு ஆண்டு கடந்த தொடர்ச்சியான விடுதலைச் செயற்பாடுகள் மூலம் சில அடைவுகளை எய்தியிருக்கின்றன.

இத்தகைய விடுதலை என்பது இலங்கையில் இருந்து பிரித்தானியரை வெளியேற்றியதற்கோ அதேபோல் இந்தியாவில் இருந்து பிரித்தானியரை வெளியேற்றியதற்கோ அல்லது வியட்னாமில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதற்கோ அல்லது கியூபாவில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றியதற்கோ அல்லது அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவை வெளியேற்றியதற்கோ ஒப்பானது அல்ல.

ஒரே நாட்டுக்குள்ளே உரிமையை வென்றெடுப்பதென்பது போர்கள் மூலம் சாத்தியப்படவில்லை. மேற்குப் பாகிஸ்தானில் இது வேறவிதமாக அமைந்தது உண்மைதான். அவ்வாறான வாய்ப்பொன்று எமக்கும் இருந்தது. ஆனால் நமது அடைவு அன்னை இந்திராவின் அகால மரணத்தினால் கனவாகக் கரைந்து விட்டது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், மும்முடிச் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இலங்கையை அடக்கியாண்டவர்கள், இந்தியாவின் இன்னொரு மாநிலமாக அமைத்து எம்மை அழித்திடும்.

இலட்சியத்தைக் கொண்டவர்கள் என்றெல்லாம் மகாவம்சம் என்னும் இதிகாசத்தின் மூலம் ஊட்டப்பட்ட எதிர்ப்புச் சிந்தனையை உள்வாங்கிய சிங்களப் பேரினவாதத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் இந்த நாட்டின் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும், சிங்கள அரசியற் கட்சிகளின் தலைவர்களும் இலங்கை சுதந்திரம் அடைந்த போது பெரும்பான்மையினர் என்ற அடிப்படையிலே அவர்களுடைய கைகளிலே கொடுக்கப்பட்ட எமது உரிமையை திருத்தப்பட்ட அல்லது புதிய அரசியலமைப்புக்குள் உட்பொதிய வைப்பது ஒன்றுதான் எமது விடுதலையின் அடைவாக இருக்கும்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தான் எமது தலைவர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

இந்த அடைவுக்கு புரிந்துணர்வு மிக முக்கியமானது. புரிந்துணர்வின் அடிப்படையிலே வரிவரியாகச் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தான் எமது விடுதலையை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு தமிழினம் என்ற அடிப்படையிலே ஒன்று சேர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சக்தி ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers