பதில் பொலிஸ் மா அதிபரும், இராணுவத் தளபதியும் கோத்தபாயவின் பக்கமா?

Report Print Kamel Kamel in அரசியல்

பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோர் கோத்தபாயவை ஆதரிப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை அகற்றிக் கொள்ளாத நிலையில் மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புரவசி பலய அமைப்பின் அழைப்பாளர் காமினி வியங்கொடவினால் இந்த முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டிருந்தது.

எனினும், முறைப்பாடு குறித்த விசாரணைகளை கிடப்பில் போடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அது குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதே வழமையான செயற்பாடாகும்.

எனினும், “இந்த விடயம் பிரச்சினையில்லை, இதனை நாம் பிறகு பார்ப்போம், தற்போதைக்கு இதனை கிடப்பில் போடுங்கள்” என பதில் பொலிஸ் மா அதிபர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோதபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட உடன், இராணுவத் தளபதி கோத்தாவிற்கு தூது அனுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் மகேஸ் சமரசிங்க ஊடாக தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோத்தபாவிற்கு தூது அனுப்பி வைத்துள்ளார்.

“என்ன செய்ய வேண்டுமென சேரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” “நான் இராணுவத் தளபதியாக இருக்கும் வரையில் எதனையும் செய்து தருவேன்” என மகேஸ் சேனாநாயக்க , ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிற்கு தூது அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் இந்த செய்திக்கு கோத்தபாய தரப்பிலிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை என மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers