எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களுக்கே ஆதரவு! வியாழேந்திரன் எம்.பி

Report Print Malar in அரசியல்

எமது மக்களின் பிரச்சினையை முடிந்தளவு தீர்ப்பதற்கு யார் அல்லது எந்தக் கட்சி இணங்குகிறதோ அவர்களுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது முக்கியமல்ல.

எமது மக்களின் பிரச்சினையை முடிந்தளவு தீர்ப்பதற்கு யார் அல்லது எந்தக் கட்சி இணங்குகிறதோ அவர்களுக்கே ஆதரவு வழங்க வேண்டும். அதை விடுத்து கம்பரெலியவும், 40 வேலை வாய்ப்பும் தந்தவர்கள் என்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியாது.

இதேவேளை, நான் பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குமாறு கூறவில்லை.

நிபந்தனைகளை முன்வைத்து யார் முடிந்தளவு அவற்றை நிறைவேற்ற வருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுதலை முதல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. கண் மூடித்தனமாக எந்த நிபந்தனையும் வைக்காமல் பொன்சேகாவுக்கு ஆதரவு! பின் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு! பின் ஐந்து வருடங்கள் பேசாமல் இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும்போது மைத்திரி ஏமாற்றி விட்டார்! ரணில் ஏமாற்றி விட்டார்!

பிசாசை பழிவாங்க பேயை காப்பாற்றினோம்! பேயை பழிவாங்க பிசாசை கப்பாற்றினோம்! என ஒட்டுமொத்தத்தில் தமிழர்களைப் பேய்க்காட்டுவது. நல்ல பிழைப்பு.

எந்த நிபந்தனைகளும் இல்லாமலே சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்போது 25, 50 வீடுகள் தந்தார் என்பதற்காக சஜித் பிரமதாசவை அடுத்த ஜனாதிபதி என்பது! ரணில் கம்பரெலிய தந்தார் என்பதற்காக அவரை அடுத்த ஜனாதிபதி என்பது! ராஜித ஐந்து பேருக்கு வேலை தந்தார் என்ற உடன் அவர் அடுத்த ஜனாதிபதி என்பது. மக்கள் முன் வந்து நாடகம் ஆடி வாக்கு சேர்ப்பது. இது ஒரு பிழைப்பாக கால காலமாக தமிழ்த் தலைமைகள் செய்து வருகின்றன.

இது ஒரு மானங்கெட்ட பிழைப்பு. இந்த நாட்டை யார் ஆள்கிறார்? யார் ஆளப்போகிறார்? என்பதற்கு அப்பால் எம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கும் நாம் எம் மக்களுக்கு இவர்களிடமிருந்து என்னத்தை பெற்றுக்கொடுத்தோம்? என்னத்தைப் பெற்றுக்கொடுக்கப் போகிறோம்? என்பதே முக்கியம்.

இதைத்தான் மிக இராஜதந்திரமாக முஸ்லிம் தலைவர்கள் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எம்மவர்கள் இராஜதந்திரம் என்றால் என்ன என்பதைக் கற்க வேண்டும். இராஜதந்திரம் என்பது கடவுச்சீட்டு வைத்துக்கொண்டு வெளிநாடு போகின்ற விடயம் மட்டுமல்ல! என அவர் குறிப்பிட்டுள்ளார்.