எங்களுடன் நட்புறவாக பழகாத கோத்தபாய மக்களுடன் எப்படி பழகுவார்: நிஷாந்த

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் கூட நட்புறவுடன் நடந்து கொள்ளாத, கோத்தபாய ராஜபக்ச, அரசியலுக்கு வந்து, மக்களுடன் நட்புறவாக நடந்து கொள்வார் என்று நம்பிக்கை கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், அவரது அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நட்புறவாக நடந்து கொள்வார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் இராணுவ நிர்வாகம் தொடர்பாக அனுபவத்தை கொண்டுள்ள நபரே அன்றி மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதி அல்ல.

அவருக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் வெற்றி பெற்ற பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாதம் ஒரு முறையேனும் கலந்துரையாடும் உறுதிமொழியை பெற வேண்டும். இல்லை என்றால், அவரை சந்திக்க நுழைவாயிலை உடைத்துக்கொண்டு சென்று சிறைக்கு செல்ல நேரிடும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை.

அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்தால், பொதுஜன பெரமுன மற்றும் கோத்தபாய ராஜபக்சவுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளை கைச்சாத்திட நேரிடும். அதற்கு தேவையான காலம் இருக்கின்றது.

தொடர்ந்தும் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் நிஷாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.