காட்டுப்புறாவுடன் மோத கழுகை களமிறக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க காட்டுப்புறாக்களை பற்றி பேசுவதாகவும் காட்டுப் புறாவுடன் மோதுவதற்கு காடை பறவை போன்ற சிறிய பறவைகள் தகுதியற்றன எனவும் கழுகை மோதவிட வேண்டும் எனவும் அந்த கழுகு கட்சிக்குள் இருக்கும் சஜித் பிரேமதாச எனவும் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் துமிந்த பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை அறிவித்து விட்டது. மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 18 ஆம் திகதி அறிவிக்க உள்ளது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை அறிவிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் முடியாமல் போயுள்ளது.

துரிதமாக வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் கோரும் ஒரே தலைவரான சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்படவில்லை என்றால், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்புடன் அவருடன் ஒன்றிணையும்.

சஜித் பிரேமதாசவினாலேயே கோத்தபாய ராஜபக்சவுடன் நேருக்கு நேர் மோத முடியும் எனவும் துமிந்த பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.