கோத்தபாய வந்தால் என்ன? ரணில் வந்தால் என்ன? நடக்கப் போவது?

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்களின் அனைத்து சிங்களத்தலைவர்களும் தமிழ்மக்களை ஏமாற்றிவந்ததுதான் வரலாறு. இந்தநிலையில் கோத்தபாய வந்தால் என்ன? ரணில் வந்தால் என்ன? யாரையும் நம்ப தமிழ்மக்கள் தயாரில்லை.

இவ்வாறு காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஜனாதிபதி வேட்பாளராக பெயர்குறிப்பிடப்பட்டிருக்கும் கோத்தபாய குறித்து பேசியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

சிங்களத்தலைவர்கள் ஆட்சிக்குவரமுன்பு இனிப்பான வாக்குறுதிகளை அள்ளிவழங்குவதும் ஆட்சிபீடமேறியதும் தங்களை மாற்றிக்கொள்வதும் வழமையாகிவிட்டது.

அவர்கள் ஒன்றில் வெள்ளைவான் கலாசாரத்தை கட்டவிழ்த்துவிடுவார்கள். அல்லது அவசரக்காலச்சட்டம் என்ற போர்வையில் தமிழ் மக்களைஅடக்கி ஆளுவார்கள். அதிகம் ஏன்?தமிழ்மக்களால் ஜனாதிபதியானவரே இன்று நல்லாட்சி என்றுகூறி முடியுமானவரை ஏமாற்றி பொல்லாட்சி செய்கிறார்.

ஜூலைக்கலவரம் அல்லது முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வரை அவர்கள் காட்டிய பிரதியுபகாரங்களை நாம் மறக்கவில்லை.

ஆறுகடக்கும்வரை அண்ணன்தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலைதான் அவர்கள் காலாகாலமாக கடைப்பிடித்துவரும் கொள்கை. தமிழ்மக்களை கொத்தடிமைகளாக நினைத்து 3ஆம் தர பிரஜைகளாகவே நடாத்திவருகிறார்கள்.

இதுவரை தமிழ் மக்களுக்காக எந்த அரசு என்ன தீர்வைத்தந்தது? பேரினவாதம்அனைத்தும் ஒருவித தமிழர் விரோத போக்கையே கடைப்பிடித்துவருகிறது. இனவாதம் அல்லது மதவாதம் இரண்டிலொன்றை கையிலெடுத்துக்கொண்டு ஆட்டிப்படைப்பதுதான் மிச்சம்.

நாம் இன்று பலகோணங்களில் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சிங்களதலைமைகளால் மட்டுமல்ல முஸ்லிம் தலைமைகளாலும் அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டுவருகிறோம்.

எதுஎப்படியிருந்தபோதிலும் பீனிக்ஸ்பறவை போல சாம்பல்மேட்டிலிருந்து தங்களைதாங்களே ஆளவேண்டும் என்ற உயரியசிந்தனையில் வீரர்களாக மறத்தமிழர்கள் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்மக்களுக்கு உறுதியான நிலைத்துநிற்கக்கூடிய திடமான வாக்குறுதியை ஏமாற்றாமல் தரக்கூடிய ஒருவர் வந்தால்அதுபற்றி பின்னர் பரிசீலிப்போம். தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியாது. நாம்சலுகைக்காக சோரம் போபவர்கள் அல்ல. எமது உரிமைகள்அங்கீகரிக்கப்படவேண்டும்.

கல்முனை விவகாரத்தில்கூட உறுதியான தீர்வைத்தரமுடியாதவர்களே அவர்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார்.