மூடிய அறைக்குள் ராஜித - சஜித் சந்திப்பு

Report Print Rakesh in அரசியல்

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையே நேற்று மூடிய அறைக்குள் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் முரண்பாடுகள் தொடர்பாகவே இருவரும் பேசிக் கொண்டனர் என்று தெரியவருகின்றது.

இந்த சந்திப்பு சுகாதார அமைச்சில் சுமார் இரண்டு மணி நேரங்கள் வரையில் நடந்துள்ளது.

சந்திப்பில் பிரபல பிக்கு ஒருவரும் கலந்து கொண்டார் என்றும், அந்தப் பிக்குவின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு நடந்தது என்றும் தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் கூட்டணி தொடர்பாக இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்பட்டது என்றும், கூட்டணியை அறிவித்த பின் வேட்பாளரைத் தீர்மானிக்கலாம் என்றும் கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படாத நிலையில் சஜித் மக்கள் முன்சென்று வாக்குறுதிகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ராஜித கேட்டுக் கொண்டார் என்று அறியமுடிகின்றது.

வேட்பாளர் தெரிவைக் கூட்டணி அமைத்த பின்னர் தீர்மானிக்கலாம் என்ற விடயத்தில் சஜித்தின் இணக்கப்பாட்டை பிரதமருக்கு ராஜித தெரிவிப்பார் என்று அறியமுடிகிறது.

அதேவேளை, வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணியை அமைக்கலாம் என்று சஜித் தரப்பு ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.