கோத்தபாய ராஜபக்ஷவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் இன்னும் இடம்பெறவில்லை என்பதால் இவர் தானா இந்தக் கட்சியின் வேட்பாளர் என்று இன்னும் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
எவ்வாறாயினும், கோத்தபாய ராஜபக்ஷவை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோத்தபாய ராஜபக்ச முன்வந்து கீத் நொயாரை தாக்கவில்லை, லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யவில்லை, ரத்துபஸ்வெலவில் தண்ணீர் கேட்டவர்களை ராஜபக்சவினர் கொல்லவில்லை என உறுதியளிக்க முடியுமா?
இதேசமயம் கோத்தபாய ராஜபக்ச காலிமுகத்திடல் நிலங்களை ஷங்ரி லாவுக்கு விற்றபோது, அவரை எதிர்க்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பார் என்ற வகையிலான கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அவரின் சகாக்கள் சிலர் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மைத்திரி மற்றும் அவரது சகாக்களுடனான கூடாரத்தில் முதல் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.