கோத்தாவை விட பிரேமதாஸ மிகவும் ஆபத்தானவர்..?

Report Print Kumar in அரசியல்

இந்தியாவோ மேற்கு நாடுகளோ தாங்கள் விரும்புகின்றவரை இந்த நாட்டின் தலைவராக கொண்டுவர வேண்டுமாகவிருந்தால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கான ஒரு தீர்வினை எட்டக்கூடிய வகையிலான பேரத்தினை பேசவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

13வது ஆண்டு செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே வல்லரசுகள் தமக்கேற்ற ஒரு தலைமையை இங்கு கொண்டு வருவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த தலைமையை இங்கு கொண்டுவருவதனால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது என்பது தான் எமது மக்கள் யோசிக்க வேண்டியவை.

இந்தியாவும் மேற்குலகும் விரும்புகின்ற ஒரு தலைமையை இலங்கைத்தீவில் கொண்டுவர இருக்கின்றது. அது கோத்தாவாக இருக்கலாம், சஜித்தாக இருக்கலாம், வேறுயாராகவும் இருக்கலாம்.

கடந்த காலங்களில் யார் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை தீர்மானிப்பதில் எமது மக்களின் வாக்குகள் பிரதானமாக இருந்தது. இந்த முறையாவது மக்கள் இந்த நிலைப்பாட்டை உணர வேண்டும்.

இந்தியாவோ அல்லது மேற்குலக நாடுகளோ தாங்கள் விரும்புகின்ற தலைமையை இங்கு கொண்டுவரவேண்டுமாக இருந்தால் எங்களுடைய மக்களின் நீண்டகால பிர்சினைக்குரிய தீர்வை எட்டக்கூடிய விதத்தில் அந்தத் தலைமையை கொண்டுவருவதற்கு நாங்கள் பேரம் பேச வேண்டும்.

பேரம் பேசுகின்ற தலைமைத்துவம் இன்று அந்தச் அசயற்பாட்டை செய்யாத காரணத்தினால் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடையக்கூடிய அபாய நிலை இருக்கின்றது.

நாங்கள் எங்களுடைய மக்களின் அடிப்படைத்தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று யாரை ஜனாதிபதியாக கொண்டுவரப் போகின்றோம் என்ற தீர்மானத்தை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றோம். மக்கள் மிகவிழிப்பாக இருக்க வேண்டும்.

இந்தியா விரும்புகின்றதைத்தான் இத்தனை காலமும் எமது மக்கள் செய்துவந்தார்கள். கடந்த நூறு ஆண்டுகளாக எமது மக்கள் இந்தியாவை நம்பி நம்பி ஏமாந்தது வரலாறாகும்.

இருந்தபோதும் இந்தியாவை இன்றும் நாங்கள் நம்புகின்றோம். ஆனால் எமது தமிழ் மக்களின் நலன் கருதி இந்தியா இதுவரை செயற்படவில்லை. உண்மையில் இந்தியா விரும்புகின்ற தலைமைத்துவம் இங்கு வரவேண்டுமாக இருந்தால் இந்தியா எமது மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

அதற்கான ஆக்கபூர்வமான கருத்துகளை இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அவ்வாறு செய்கின்றபோது எமது தமிழ் மக்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த பூகோள அரசியல் போட்டியிலே சீனா விரும்புகின்ற தலைமையை இங்கு கொண்டுவருவதாக இருந்தால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும். தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமல் இந்தத் தலைமைகள் வரமுடியாது என்பது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷையாக இருக்கின்ற அந்தத் தேசம் இறைமை அங்கீகரிக்கப்படக்கூடிய விதத்தில் இந்தியா நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துகளை முன்வைத்து எங்களுடைய தேசத்தை அங்கீகரித்துவிட்டால் எங்தவிதத்திலும் நாங்கள் இந்தியாவிற்கு கடமைப்பட்டவர்களாகவே இருப்போமே தவிர அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட மாட்டோம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற இரண்டு தலைமைகளினதும் கடந்தகால வரலாறுகளை எமது மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். கோத்தபாயவிற்கு முதல் வெள்ளைவேனில் கடத்தியவர் பிரேமதாச ஆவார்.

பிரேமதாசவின் காலத்தில் தான் மிகக் கொடூரமான படுகொலைகள் இங்கு நடைபெற்றன. மனித குலத்திற்கு எதிரான படுகொலைகள், கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துறுக்கொண்டான் படுகொலை போன்றவை பிரேமதாசவின் காலத்தில்தான் நடந்தன.

கோத்தபாயவைவிட சஜித் நல்லவர் அல்லது சஜித்தைவிட கோத்தபாய நல்லவர் என நீங்கள் நினைக்கக்கூடாது. இவர்கள் இருவருமே ஒரே முகத்தைக் கொண்டவர்கள் தான்.

நாங்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகள், எங்களைத் தாண்டி யாரும் இங்கு பெரியவர்களாக வரக்கூடாது,கேள்வி கேட்கக்கூடாது என்ற விதத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரேமதாச இறந்தவுடன் எனது தந்தையின் வழியில் செல்வேன் என்று சஜித் கூறினார். அவருடைய தந்தை என்ன செய்தார் என்பதை மக்கள் அறிய வேண்டும். தந்தை செய்தது முழுக்க முழுக்க தமிழினத்தை அழித்தது தான். ஆகவே வரலாறுகளை திரும்பிப் பார்த்துத்தான் நீங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.

நீங்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதமாக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.