ரணிலை வீட்டிற்கு அனுப்பி சஜித் முன்னோக்கி வர வேண்டும்? என்ன கூறுகிறார் கபீர்

Report Print Sinan in அரசியல்

சட்டத்தை மீறியே மகிந்த ராஜபக்ச செயற்படுகின்றார், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றார். எனினும் மொட்டுக் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் பெற்றுக்கொள்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவ்வாறுதான் நாம் பழக்கப்பட்டிருக்கின்றோம். இது ஒரு குடும்பத்திற்கு, ஒரு குழுவிற்கு அல்லது ஒரு பரம்பரைக்கு, ஒரு தரப்பிற்கு இந்த கட்சி சொந்தமாகாது. சொந்தமாக போவதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - அப்படியென்றால் ரணில் வீட்டிற்கு செல்ல வேண்டும், சஜித் முன்னோக்கிவர வேண்டுமென்றா கூறுகின்றீர்கள்?

கபீர் - இந்த நாடு முன்னேற வேண்டும். இந்த நாடு மாற்றமடைய வேண்டும். அபிவிருத்தி அடைந்த நாடாக மாறவேண்டும். வெறுமனே பேசிக்கொண்டிருந்தது போதும். ஆகவே அவ்வாறு மக்கள் எண்ணும் மனிதர் தொடர்பில் பொதுமக்கள் சிந்திக்கின்றனர்.

ஆகவே பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அந்த இடத்திற்குச் செல்வதற்கு நாம் தயார். ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்கத்தை மதிக்கும் கட்சியாகும். எமது தலைவர் ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவர். ஆகவே மிகச்சரியான பதிலை கட்சி தரும். சகோதரரையும், அண்ணணும், தம்பியும், தந்தையும் மகனும் தீர்மானம் மேற்கொள்ளும் கட்சியல்ல.

கேள்வி - வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏன் இவ்வளவு தாமதம்?

கபீர் - மற்றையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாம் செயற்படுவது இல்லை. நாங்கள் மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றோம்.

அனைத்து தரப்பினதும் கருத்துக்களை கேட்டறிந்து நாம் செயற்படுவோம். பொதுஜன பெரமுனவின் சம்மேளனத்தின்போது, அவர்கள் மக்கள் கோரும் ஒருவரை தருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர்களது வீட்டிற்குள் தீர்மானம் மேற்கொண்டு, அங்கு வந்து பலவந்தமாக புகைப்படங்களை கையில் கொடுத்து, பட்டாசுக் கொளுத்தி வேட்பாளரை நியமிக்க முடியும்.

எங்களுக்கு காலம் இருக்கின்றது. தேர்தல் திகதியும் இன்னமும் குறிப்பிடப்படவில்லை. சரியான நேரத்தில், மக்களின் தீர்ப்பிற்கு அமைய, ஜனநாயக ரீதியில் நாம் வேட்பாளரை பெயரிடுவோம்.

கேள்வி - வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எப்போது?

கபீர் - ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக வேட்பாளரை பெயரிடுதல் மற்றும் கூட்டணி அமைப்பதில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், வேட்பாளரை பெயரிடுதல் மற்றும் கூட்டணி அமைப்பதில் கைச்சாத்திடும் தினம் மற்றும் இடம் தொடர்பில் அறிவிப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச யாப்பினை மீறி செயற்படுகின்றார். சட்டத்தை மீறியே மகிந்த ராஜபக்ச செயற்படுகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றார்.

எனினும் மொட்டுக் கட்சியின் தலைவர் பதவியையும் பெற்றுக்கொள்கின்றார். எனினும் அவர் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். அவ்வாறென்றால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாது செய்ய வேண்டும்.

அவர் யாப்பினை மீறி செயற்படுகின்றார். அதனைவிட கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இன்னமும் இரத்து செய்யப்படவில்லை.

எனினும் அவர்கள் நாட்டின் சட்டத்தை, நீதியை மதிப்பதாக தெரிவிக்கின்றனர். அவர்களை எவ்வாறு நம்பமுடியும் என கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Offers