ஐக்கிய தேசியக் கட்சி தோற்கடிக்கப்பட்டு 134ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்று எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிரதேசத்தை தங்களின் தாயகப் பூமியாக உரிமை கோருகின்றனர். அவர்கள் முழு இலங்கையையும் உரிமை கோரினாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் எதிர்க்கப் போவதும் இல்லை.
ஆனால் அதற்கான பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்கள் அனைத்தும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பௌத்த மத விவகாரங்களிலும் அனாவசியமாக மூக்கை நுழைத்துள்ளார்கள். பெரஹரவில் யானைகளை எடுத்துச் செல்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளனர். சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.
கோத்தபாய எங்களது நண்பர்களில் ஒருவர். அவர் இந்த நாட்டைப் பாதுகாப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு ஆதரவளிப்பதில் துணிச்சலுடன் செயற்பட வேண்டும் என்றும் குணவங்ச தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.