கூற்றைத் திருத்துவாரா இராணுவத் தளபதி?

Report Print Dias Dias in அரசியல்
270Shares

பாதுகாப்பு வேலைகளைப் பார்ப்பது எங்களின் பணி, அது குறித்து நாங்கள் யாருக்கும் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்கள் வேலையைப் பார்க்க எங்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய வேலையும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் ஆலயத்தில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நல்லூரில் வைத்து இராணுவத் தளபதி இவ்வாறு கூறியிருப்பதாக காலைக் கதிர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க போன்ற ஒருவரிடமிருந்து இத்தகைய பதிலை நாம் எதிர்கொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அதுவும், மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவர் மக்களின் மன்றமான நாடாளுமன்றத்தில், அந்த மக்களின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டபோது, அதனை இப்படி எடுத்தெறிந்து அற்பத்தனமாகக் கருதி இராணுவத் தளபதி பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றமை, இராணுவத் தளபதிக்கு பொருத்தமானது அல்ல. அவர் பணி புரியும் அரசுக்கும் அழகானதல்ல.

இராணுவத்தின் தொழில் மக்களைப் பாதுகாப்பது என்பது தான் உலக நடைமுறை. அதை இராணுவத் தளபதி இங்கு வந்து யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உபதேசிக்கின்றமை தான் பெரும் துன்பியல் கட்டமாகும்.

மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக இராணுவத்தைப் பீற்றிக் கொள்ளும் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு, எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும், இந்த மிலேனியத்தின் முதல் தசாப்தத்திலும் இலங்கை இராணுவமும் ஏனைய படைகளும் இங்கு என்ன செய்து கொண்டிருந்தன? என்பது தெரியாதா? இங்கு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.

அண்மையில் கூட, இலங்கை விமானப் படைக் குண்டு வீச்சு விமானத்தின் வான் தாக்குதலினால் கொல்லப்பட்ட செஞ்சோலைச் சிறார்கள் அறுபது பேரின் நினைவு தினத்தை பெரும் மௌன அழுகையோடு தாளராத துக்கத்தை மனதில் புதைத்த படி அனுஷ்டித்தோமே!

இன்று மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறும் அதே இராணுவம் தான், அதே படைகள் தாம் செஞ்சோலைக் கொடூரங்கள் போல பல்லாயிரம் மடங்கு கொடூரங்களை கொலைவெறி அட்டகாசங்களை தமிழர் தாயக மண்ணில் வகை தொகையின்றிப் புரிந்தன என்பது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ கூடியவை அல்ல.

இதே இராணுவமும் அதன் வழிகாட்டல் கட்டமைப்புகளும் என்ன செய்யும் என்பது இராணுவத் தளபதிக்குத் தெரியாதவை அல்ல. அவரே அதை பட்டறிவாகக் கண்டு அனுபவித்தவர் தான்.

இந்த இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் இராணுவம் மட்டும் தான் என்றால் 2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளாராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா அத்தேர்தலில் தோல்வியடைந்தார் என அறிவிக்கப்பட்டதும் இன்றைய தளபதி மகேஷ் சேனநாயக்க நாட்டை விட்டுத் தப்பி ஓடி, அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் புரிந்திருக்கத் தேவையில்லை.

அமெரிக்க இராணுவத் துணைப்படைப் பிரிவில் பணி புரிந்திருக்கத் தேவையில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்று, கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மெதுவாக நாட்டுக்குள் தலை நீட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தயவில் மீண்டும் இராணுவத்துக்குள் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் இராணுவத் தளபதியாகியிருக்கத் தேவையில்லை.

2010 ஜனவரியின் பின்னரும் தொடர்ந்து இராணுவ சேவையில் பணியாற்றி, அவர் எப்போதோ இராணுவத் தளபதியாகியிருக்க முடியும்.

எனவே, இலங்கை இராணுவம் இந்த மண்ணில் தமிழர் தாயக மண்ணில் எப்படிச் செயற்பட்டது, அது தொடர்பில் இந்த மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்களின் மிக மோசமான கொடூரமான குரூரமான பட்டறிவு யாது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.

அதை நாடாளுமன்றில் பிரதிபலிப்பதுதான் அந்த மக்களின் பிரதிநிதியான சிவஞானம் சிறீதரன் எம்.பியின் கடமை என்பதும் அவருக்குப் புரியும்.

ஆகவே, சிவஞானம் சிறீதரன் எம்.பியின் நாடாளுமன்ற உரையை கொச்சைப்படுத்தும் விதத்தில் ஏளனப்படுத்தும் வகையில் இராணுவத் தளபதி கருத்து வெளியிட்டிருப்பாராயின், அதை அவர் திரும்ப பெற்றுக் கொள்வது தான் முறையாகும்.

முன்னைய இராணுவத் தளபதிகள் போல் அல்லாது இப்போது தமிழ் மக்களாலும் நன்கு மதிக்கப்படும் ஒருவராக தளபதி மகேஷ் சேனநாயக்க இருக்கின்றமையால் நிச்சயம் அவர் அப்படி செய்வார் என நம்புகிறோம். செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.